Published : 17 Mar 2015 06:50 PM
Last Updated : 17 Mar 2015 06:50 PM
நிலம் கையகப்படுத்துதல் மசோதா வுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 14 கட்சிகளின் எம்பிக்கள் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பேரணியாகச் சென்றனர்.
அங்கு சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட 26 எம்பிக்கள் கொண்ட குழுவினர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. அந்தச் சட்டம் வரும் ஏப்ரல் 5-ம் தேதியுடன் காலாவதியாகிறது. அதற்கு முன்பாக அவசரச் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும்.
எனவே, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அவசரச் சட்டத்துக்கு மாற்றாக நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா மக்களவையில் கடந்த 10-ம் தேதி நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் எதிர்க் கட்சிகளின் ஆதரவைக் கோரியுள்ளது. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஓரணியில் 14 கட்சிகள்
இந்தப் பின்னணியில் மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 14 கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு நேற்று பேரணி நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் தினேஷ் திரிவேதி, சமாஜ்வாதி மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், திமுக எம்பி கனிமொழி உட்பட 14 கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்றனர்.
சோனியா வேண்டுகோள்
பேரணியின் தொடக்கத்தில் சோனியா காந்தி பேசியதாவது: நிலம் கையகப்படுத்துதல் மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டுள்ளன. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்துதல் மசோதா விவசாயிகளின் நலனுக்கு எதிராக உள்ளது. இந்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும். இவ் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட்டு விவசாயிகளின் நலனைக் காக்க கோரிக்கை விடுக்கிறோம்.
பேரணியின் தொடக்கத்தில் சோனியா காந்தி பேசியதாவது: நிலம் கையகப்படுத்துதல் மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டுள்ளன. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்துதல் மசோதா விவசாயிகளின் நலனுக்கு எதிராக உள்ளது. இந்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும். இவ் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட்டு விவசாயிகளின் நலனைக் காக்க கோரிக்கை விடுக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பேரணியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் கூறும்போது, நிலம் கையகப்படுத்துதல் மசோதா விவசாயிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கும் எதிரானது என்றார்.
100 எம்பிக்கள் பேரணி
இதைத் தொடர்ந்து சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சுமார் 100 எம்பிக்கள் பேரணியாகச் சென்றனர். பின்னர் சோனியா தலைமையில் 26 எம்பிக்கள் கொண்ட குழுவினர், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
அதிமுக பங்கேற்கவில்லை
மக்களவையில் நிலம் கையகப்படுத்துதல் மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றபோது மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது. எனவே எதிர்க்கட்சிகளின் பேரணியில் அதிமுக பங்கேற்கவில்லை. இதேபோல் பிஜு ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும் பேரணியில் கலந்து கொள்ளவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT