Published : 16 Mar 2015 06:14 PM
Last Updated : 16 Mar 2015 06:14 PM
நிலம் கையகப்படுத்துதல் மசோதாவுக்கு எதிராக இளைஞர் காங்கிரஸார் டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டம் செய்த போது போலீஸார் தடியடி நடத்தினர்.
தடியடி நடவடிக்கையில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அம்ரிந்தர் சிங் ராஜா பிரார் உட்பட பலரும் காயமடைந்தனர்.
ஜந்தர் மந்தரில் தடுப்புகளை உடைத்து கொண்டு நாடாளுமன்றத்துக்குள் நுழைய முற்பட்டபோது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
மூத்த காங்கிரஸ் தலைவர்கள், குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், அம்பிகா சோனி, அஹ்மட் படேல் ஆகியோர் கலந்து கொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினர்.
மாநிலங்களவையில் நில மசோதாவைத் தடுப்போம்: காங்கிரஸ்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் உணவுப் பாதுகாப்பு மசோதாவை பலவீனப்படுத்தும் இந்த நில மசோதாவை மாநிலங்களவையில் நிச்சயம் தடுப்போம் என்று காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
அவர் தொண்டர்களிடத்தில் பேசும் போது, “நாடாளுமன்றத்துக்கு வெளியே நீங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துங்கள், உள்ளே நாங்கள் அந்த மசோதா தோல்வியடைவதை உறுதி செய்கிறோம்” என்றார்.
மோடி உடை மீது விமர்சனம் வைத்த ஜெய்ராம் ரமேஷ்
பேரணியில் உரையாற்றிய ஜெய்ராம் ரமேஷ் மோடியின் ரூ.10 லட்சம் மதிப்புள்ள உடை மீது கேலி விமர்சனம் வைத்தார். மகாத்மா காந்தியை துணைக்கு அழைத்த ஜெய்ராம் ரமேஷ் கூறும் போது, “சபர்மதியின் ஒரு மனிதர் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர், இன்றைய சபர்மதி மனிதர் ரூ.10 லட்சத்துக்கு ‘சூட்’ அணிகிறார். இவர்கள் மதமாற்றத்தை ‘தாயகம் திரும்புதல்’ என்று ’கர் வாப்சி’-யை கொண்டு வந்தவர்கள்.
மாவட்ட ஆட்சியர்களின் கையில் இருந்த அதிகாரத்தை நாங்கள் முதன்முறையாக விவசாயிகளிடத்தில் மாற்றினோம். விவசாயக் கூலிகளும் கூட சட்டத்தின் மூலம் பேரம் பேசும் வாய்ப்பை உருவாக்கினோம். 4 மடங்கு இழப்பீடு அளிக்கும் பிரிவுகளும் இருந்தன. ஆனால் இன்று அனைத்தும் ஒழிக்கப்பட்டு விட்டது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT