Published : 20 Mar 2015 08:46 AM
Last Updated : 20 Mar 2015 08:46 AM
கிருஷ்ணகிரியில் தலித் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப் பட்டது தொடர்பாக மக்கள வையில் கேரள எம்.பி. கொடிக்குனில் சுரேஷ் கேள்வி யெழுப்பினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
நேற்று மக்களவை பூஜ்ஜிய நேரத்தில் எம்.பி. சுரேஷ், தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் தலித் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியைக் குறிப்பிட்டுப் பேசினார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
உறுப்பினர் பகுதியில் அமர்ந்திருந்த பேரவைத் துணைத் தலைவர் தம்பிதுரையும் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
சுரேஷின் புகாருக்கு பதில் அளித்து அதிமுக அவைத் தலைவர் டாக்டர். பி. வேணுகோபால் பேசும்போது, “பெண்களை அந்த இளைஞர் கேலி செய்ததால் அச்சம்பவம் நடந்தது. ஆனால், சமூக வேற்றுமை காரணமாக இது நடந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருப்பது எதிர்பாராத ஒன்று. கருவானூர் கிராமத்தை சேர்ந்த அரவிந்தன் என்பவர், அவரது நண்பர் தினேஷ் என்பவருடன் அருகிலுள்ள கிராமத்தில் கடந்த 2-ம் தேதி நடந்த விழாவில் பங்கேற்றுள்ளார். அரவிந்தன் கேரளத்தில் பணிபுரிபவர் என்பதால், இந்த விவகாரத்தின் உண்மை அறியாமல், இப்பிரச்சினை இங்கு எழுப்பப்பட்டுள்ளது. தினேஷ் அங்கு பெண்களைக் கேலி செய்ததால் கிராமவாசிகள் கண்டித்துள்ளனர்.
அப்போது ஏற்பட்ட மோதலில் தினேஷ் சிறிய அளவில் காயமடைந்தார். உடனடியாக காவல்துறையினர் அதே நாளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்” என்றார்.
பேரவைத் தலைவர் சுமித்ரா மகாஜனின் வேண்டு கோளுக்கிணங்க, தனது பேச்சை வேணுகோபால் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT