Last Updated : 24 Mar, 2015 09:20 AM

 

Published : 24 Mar 2015 09:20 AM
Last Updated : 24 Mar 2015 09:20 AM

இந்திய ராணுவத்தில் அதிகரித்து வரும் பெண் அதிகாரிகள்

இந்திய ராணுவத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதற்கு, சமீப காலமாக அவர்கள் பல்வேறு பிரிவுகளில் முன்னிறுத்தப்படுவதே காரணமாகக் கூறப்படுகிறது.

நம் நாட்டின் முப்படைகளான காலாட்படை, கடற்படை விமானப் படை ஆகியவற்றில் பெண்களின் எண் ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. காலாட்படையில் கடந்த மார்ச் 1-ம் தேதி, பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை 1,436 ஆக உள்ளது. இது கடந்த 2014-ல் 1,344 ஆகவும் 2013-ல் 1,253 ஆகவும் இருந்தது. இதுவே 2012-ல் 1,151 ஆக இருந்தது.

பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை கடற்படையில் 2012-ல் 385 ஆக இருந்தது. இது 2013-ல் 411, 2014-ல் 455 என அதிகரித்து, இந்த ஆண்டு 525 ஆக உயர்ந்துள்ளது.

விமானப்படையில் இந்த ஆண்டு 1,331 பெண் அதிகாரிகள் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 2014-ல் 1,265, 2013-ல் 1,174 ஆகவும் 2012-ல் 1,083 எனவும் இருந்தது.

எனினும் காலாட்படையில் நேரடி யாக போரிடும் படைகளில் பெண் அதி காரிகள் இதுவரை நியமிக்கப்பட வில்லை. கடற்படையில் போருக்கான கப்பல்கள், விமானப்படையில் நேரடிப் போர் விமானங்கள் ஆகியவற்றில் பணியாற்ற இவர்களுக்கு அனுமதி யில்லை. மாறாக சார்புப் படைகளில் மட்டும் பணியாற்றி வந்தனர்.

பிரிகேடியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பின், தற்போது பிரசார் பாரதியின் முதன்மை ஆலோசகராக பணியாற்றி வரும் வி.ஏ.எம்.உசைன் இது குறித்து ‘தி இந்து’விடம் கூறும் போது, “போர் கைதிகளாகப் பிடிக் கப்படும் வீரர்கள் எதிரி நாடுகளால் பல்வேறுவித துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். இதில் பெண்கள் சிக்கினால் அது அதிக துயரமானதாகி விடும். இதுபோன்ற பல காரணங்களை ஆய்வுசெய்த ஒருங்கிணைந்த ராணுவ அலுவலர்களின் தலைமையகம் 2006-ம் ஆண்டும், 2011-ல் முப்படைகளின் உயர்நிலைக் குழுவும் நேரடிப் போர் படைகளில் பெண்களை அமர்த்த பரிந்துரைக்கவில்லை. ஆனால் தொடர்ந்து ராணுவத்தின் பல்வேறு பணிகளில் பெண்கள் படைக்கும் சாத னைகள் மற்றும் காட்டும் ஆர்வத்தாலும் அவர்கள் படிப்படியாக ஆண்கள் மட்டுமே பணியாற்றி வந்த பல்வேறு பிரிவுகளில் தற்போது அதிகாரிகளாக அமர்த்தப்படுகின்றனர்” என்றார்.

தற்போது முப்படைகளில் உளவு, கல்வி, பொறியியல், நேரடிப் போரில் ஈடுபடாத விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் போக்குவரத்து ஆகிய சார்பு படைப் பிரிவுகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்தப் பிரிவுகளில் ஆண்களை போல 14 ஆண்டுகள் வரையிலான குறுகிய காலப் பணியில் பெண் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். இதற்கு முன் பெண்கள் தங்கள் குறுகிய காலப் பணிகளில் வெறும் 5 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றி, மேஜர் பதவி வகித்த பின் ஓய்வு பெற்றுவந்தனர். இந்தநிலை மாறி 14 ஆண்டுகளில் காலாட்படையில் லெப்டினன்ட் கர்னல் வரையும் விமானப்படை மற்றும் கடற்படையில் அதற்கு இணையான பதவிகளிலும் பணியாற்றுகின்றனர்.

இதற்கு முன் சக ஆண் அதிகாரி களுக்கு இணையான சம்பளம் மற்றும் இதர சலுகைகள் பெறமுடியாததால் பெண் அதிகாரிகள் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி வந்தனர். இதனால், 10-க்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகள் காலாட்படையை விட்டு பாதியிலேயே சென்று விட்டதுடன், இருவர் தற்கொலை செய்துகொண்ட தாகவும் புகார் எழுந்தது. இது தொடர் பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்ட பின், ராணுவத்தில் படிப்படியாக ஆயுதம் ஏந்திய படி பல்வேறு பிரிவுகளிலும் பெண்கள் இடம்பெறத் தொடஙகினர்.

கடந்த ஜனவரி 26-ல் டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் முதன் முறையாக ராணுவத்தின் 154 பெண் அதிகாரிகள் கொண்ட படைப் பிரிவு கலந்துகொண்டது. இந்த அணிவகுப்புக்கு 25 வயது கேப்டன் திவ்யா அஜீத் தலைமை வகித்தார். இவர் சென்னை, ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் 2010-ல் சிறந்த வீராங்கனையாக வீரவாள் பரிசு பெற்றவர் ஆவார்.

ராணுவத்தில் பெண்களுக்கு பணியிடப் பாதுகாப்பு அதிகம். இங்கு, துன்புறுத்தல் மற்றும் பாரபட்சம் குறித்த புகார்கள் 2013-ம் ஆண்டு வரை காலாட்படையில் 5 மட்டுமே பதிவாகி உள்ளது. இது கடற்படையில் பூஜ்ஜியமாகவும், விமானப்படையில் 2011 வரை 17 ஆகவும் உள்ளது. இதையும் முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டி விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x