Published : 17 Mar 2015 07:53 PM
Last Updated : 17 Mar 2015 07:53 PM
மக்களின் எதிர்பார்ப்புகளை பாஜக அரசு பூர்த்தி செய்யவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரஹலாத் விமர்சனம் செய்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் செவ்வாய்க்கிழமை அனைத்திந்திய நியாயவிலை கடை கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டார் மோடியின் சகோதரர் பிரஹலாத். இவர் இந்தக் கூட்டமைப்பின் துணைத் தலைவர் ஆவார்.
"நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக பெரும்பான்மை பெற வேண்டும் என்று கடுமையாக உழைத்தோம், பெரும்பான்மையையும் பெற்றன, ஆனாலும், ஜந்தர் மந்தரில் தர்ணா நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தோல்வி இது என்றே நான் நினக்கிறேன்.
சகோதரருக்கு எதிராக சகோதரர் காட்டும் எதிர்ப்பு அல்ல இது. என்னைப் பொறுத்தவரையில் என் சகோதரர் மோடி வழிபாட்டுக்குரியவர்தான். நான் அவர் மீது மரியாதை வைத்துள்ளேன். ஆனால், நான் செய்யும் தொழில் இந்த மேடையில் வந்து என் சகோதரருக்கு முன்னால் எனது குரலை எழுப்ப வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊழலை ஒழிப்போம் என்ற செய்தியுடன் மோடி பிரதமராக இருக்கும் பாஜக ஆட்சியில் அமர்ந்தது. ஆனால் இப்போது வீதிகளில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எங்கள் பிரச்சினைகளுக்கு பாஜக அரசு பராமுகமாக இருந்தால், டெல்லியில் பாஜக என்ன சந்தித்ததோ அதனை உ.பி., பிஹார் ஆகிய மாநிலங்களிலும் சந்திக்க நேரிடும். நான் பாஜக உறுப்பினர்தான், ஆனாலும், தேசிய கட்சிகளின் தவறான கொள்கைகளுக்கு எதிராக நான் போராடுவேன்.
பிரச்சினைகளை தீர்ப்பதில் பாஜக அரசுக்கு உறுதிப்பாடு இல்லை" என்று கூறினார் மோடியின் சகோதரர் பிரஹலாத்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT