Last Updated : 30 Mar, 2015 10:30 AM

 

Published : 30 Mar 2015 10:30 AM
Last Updated : 30 Mar 2015 10:30 AM

விவசாயிகள், வேளாண்மைக்கு பாதகமான நிலம் கையகப்படுத்தும் மசோதாவை ஜனதா பரிவார் நிச்சயம் ஆதரிக்காது: ஐக்கிய ஜனதா தளம் அறிவிப்பு

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை, ஜனதா பரிவார் கட்சிகள் நிச்சயம் ஆதரிக்காது என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. எனினும், மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்காக மாநிலக் கட்சிகளின் ஆதரவை பாஜக கோரி வருகிறது.

இந்நிலையில், ஐஜத பொதுச் செயலாளர் கே.சி.தியாகி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவை, தற்போதுள்ள வடிவில் ஆதரிக்க மாட்டோம். மேலும், ஜனதா பரிவாரில் உள்ள எந்தக் கட்சியும் மசோதாவை ஆதரிக்காது. கடந்த வெள்ளிக்கிழமை ஜனதா பரிவார் உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், ஐஜத தலைவர் சரத்யாதவ், பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்தக் கூட்டத்தில், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமங்கள் முதல் தலைநகர் டெல்லி வரை போராட்டங்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம். தேவைப்பட்டால் நாடாளுமன்றத்தில் அலுவல்கள் நடைபெறாமல் தடுப்போம். இதுதொடர்பான செயல்திட்டம் குறித்து பிஜு ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளுடன் ஐஜத தலைவர்கள் பேச்சு நடத்த உள்ளனர். மசோதா தொடர்பாக மத்திய அரசுடன் பேசத் தயாராக உள்ளோம். எந்த முடிவு எடுப்பதற்கு முன்பும் எதிர்க்கட்சிகள், விவசாயிகளை அழைத்து மத்திய அரசு பேச வேண்டும். இவ்வாறு தியாகி கூறினார்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு, ஐஜத தலைவர் சரத்யாதவ் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘நிலம் கையகப்படுத்தும் மசோதாவின் தற்போதைய வடிவத்தை ஏற்க முடியாது. விவசாயிகள், வேளாண்மைக்குப் பாதகமான அம்சங்கள் மசோதாவில் உள்ளன. அவற்றை எல்லாம் நீக்க வேண்டும். காங்கிரஸ் கொண்டு வந்த பழைய மசோதாவை அப்படியே நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளிக்கும்’’ என்று சரத்யாதவ் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இதற்கிடையில் காங்கிரஸ் சார்பில், மசோதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் பணியில் முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஈடுபட்டுள்ளார். அவர் தியாகியைத் தொடர்புகொண்டு நேற்று ஆலோசனை நடத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x