Published : 24 Mar 2015 07:36 AM
Last Updated : 24 Mar 2015 07:36 AM

8,000 ஏக்கரில் உருவாகிறது ஆந்திராவின் தலைநகர் அமராவதி - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆந்திர மாநிலத்தின் புதிய தலை நகருக்கு ‘அமராவதி’ எனப் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆந்திர அரசு ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் தலைநகராக ஹைத ராபாத் விளங்கியது. தெலங்கானா பிரிவினைக்குப் பிறகு, தெலங் கானாவின் நிரந்தர தலை நகராக ஹைதராபாத் இருக்கும் என்றும், அதே வேளையில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆந்திரம், தெலங்கானா மாநிலங் களுக்கு பொது தலைநகராக ஹைதராபாத் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆந்திர புதிய தலைநகர் நிர்மாணப் பணிகளுக் காக குழு அமைக்கப்பட்டது. விசாகப்பட்டினம், விஜயவாடா, குண்டூர், ஓங்கோல், திருப்பதி ஆகிய நகரங்களில் ஏதேனும் ஒன்று ஆந்திரத்தின் புதிய தலை நகராக அமையும் என எதிர்பார்க் கப்பட்டது.

ஆனால், மாநிலத்தின் மையப் பகுதியில்தான் புதிய தலைநகர் அமைய வேண்டும் என்பதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதியாக இருந்தார். இதனால், கிருஷ்ணா நதிக்கரையின் ஓரத்தில் குண்டூர் மாவட்டம் தூளூரு பகுதியில் உள்ள 29 மண்டலங்கள் புதிய தலைநகருக்கான இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

புதிய தலைநகருக்காக இதுவரை 33 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப் படுத்தப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் அரசு மற்றும் வனத்துறைக்குச் சொந்தமான 15 ஏக்கர் பரப்பளவு நிலம் உள்ளது.

இதில், 8,000 ஏக்கரில் புதிய தலைநகருக்கான கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.

நகரங்களின் கலவை

ஆந்திர புதிய தலைநகர் எந்தவொரு குறிப்பிட்ட நகரின் மாதிரியாக இல்லாமல், அனைத்து சிறந்த நகரங்களின் கூட்டுக் கலவையாக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட் டுள்ளது.

ஒருங்கிணைந்த நிர்வாக கட்டமைப்புக்கு மலேசியாவில் உள்ள புத்ராஜாயா நகர், கட்டிடங்களுக்கு நவி மும்பை, ஆற்றின் முகப்பு பகுதிக்கு லண்டனில் உள்ள தேம்ஸ், நியூயார்க்கில் உள்ள ஸ்கைகிராப்பர் கட்டிடங்கள், சீனாவைப் போன்ற நகரக் கட்டமைப்பு அல்லது சிங்கப்பூர், துபாய் போன்ற துறைமுகம் சார்ந்த மேம்பாடு போன்ற அனைத்து நகரங்களின் சிறப்புகளையும் உள்ளடக்கிய நகரமாக புதிய தலைநகர் அமைய வேண்டும் என ஆந்திர அரசு விரும்பு கிறது.

சிங்கப்பூர் நிறுவனங்கள் புதிய தலைநகருக்கான மாஸ்டர் பிளானை வரும் ஜூன் மாதம் வழங்க உள்ளன.

தலைநகரின் பெயர்?

புதிய தலைநகருக்கு என்ன பெயர் வைப்பது எனக் கேள்வி யெழுந்தது. பல்வேறு விதமான பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதில், தூளூருக்கு 20 கி.மீ. தொலைவில் உள்ள சரித்திரப் புகழ்பெற்ற அமராவதி நகரின் பெயரை வைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x