Last Updated : 17 Mar, 2015 09:13 PM

 

Published : 17 Mar 2015 09:13 PM
Last Updated : 17 Mar 2015 09:13 PM

பாஜக எம்.பி.களுக்கு கண்டிப்பு

மக்களவையில் கடந்த வாரம் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றும்போது அவையில் இல்லாத பாஜக எம்.பி.க்கள் இன்று (செவ்வாய்கிழமை) கண்டிக்கப்பட்டனர்.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மக்களவையில் கடந்த வாரம் நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றும்போது அவைக்கு வராத பாஜக எம்.பி.க்களின் பட்டியலை இக்கூட்டத்தில் அமைச்சர் வெங்கய்ய நாயுடு வாசித்தார். இவர்கள் எழுந்து நிற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ, எம்.பி.க்கள் சத்ருகன் சின்ஹா, வருண்காந்தி, பூணம் மகாஜன், ப்ரீத்தம் முண்டே (முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகள்), ரித்தி பதக் (ம.பி.), சந்திர பிரகாஷ் ஜோஷி (ராஜஸ்தான்) உட்பட சுமார் 25 உறுப்பினர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். கூட்டத்தில் எழுந்து நின்ற இந்த எம்.பி.க்கள் சங்கடத்தில் நெளிந்தனர்.

இதில் 2 எம்.பி.க்கள் தங்கள் குடும்பத்தில் துக்க நிகழ்ச்சியை காரணம் காட்டினர். ஒருவர் திருமண நிகழ்ச்சியை காரணம் காட்டினார். மற்றவர்கள் தகுந்த காரணத்தை தெரிவிக்கவில்லை.

முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றும்போது எம்.பி.க்கள் கட்டாயம் அவைக்கு வரவேண்டும் என்று பாஜக ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ஆஜராகத் தவறிய எம்.பி.க்களை வெங்கய்ய நாயுடு கண்டித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x