Published : 27 Mar 2015 10:23 AM
Last Updated : 27 Mar 2015 10:23 AM
ஹரியாணா மாநிலத்தில் பூபிந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அரசு மற்றும் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி அதை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு பெரும் தொகைக்கு ராபர்ட் வதேரா விற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை அப்போதைய காங்கிரஸ் அரசு மறுத்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. இதைத் தொடர்ந்து ராபர்ட் வதேராவின் நில பேர விவகாரங்கள் குறித்து தற்போது தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக 2013-14-ம் ஆண்டுக்கான தலைமை கணக்கு தணிக்கைத் துறை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கை ஹரியாணா சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
‘வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் 2008-ம் ஆண்டில் குர்கான் நகரில் 3.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாக வாங்கி அதை டி.எல்.எப். நிறுவனத்துக்கு ரூ.58 கோடிக்கு விற்றுள்ளது. இதற்காக சட்டங்கள் வளைக்கப்பட்டுள்ளன’ என்று அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் மனோகர் லால் கத்தார் கூறிய போது, அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, இந்த ஊழல் விவகாரம் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
ராபர்ட் வதேரா ஊழல் விவகாரங்களை ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். அவர் ட்விட்டரில் கூறியபோது, சிஏஜி அறிக்கை மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது, எனினும் இந்த விவகாரத்தில் எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை மனதை இன்னும் பாதிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT