Last Updated : 04 Mar, 2015 09:08 PM

 

Published : 04 Mar 2015 09:08 PM
Last Updated : 04 Mar 2015 09:08 PM

அண்ணா ஹசாரேவுக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு

நிலம் கையகப்படுத்தல் மசோதாவுக்கு எதிராக போராட்டம் தொடங்கியுள்ள சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அண்ணா ஹசாரேவுக்கு ஃபேஸ்புக் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கனடா நாட்டைச் சேர்ந்த அயல்நாட்டு வாழ் இந்தியர் ஒருவர் அண்ணா ஹசாரேவுக்கு ஃபேஸ்புக் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

கனடாவைச் சேர்ந்த இருவர் மீது எப்.ஐ.ஆர்.

சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவுக்கு பேஸ்புக் மூலம் கொலை மிரட்டல் விடுத்த கனடா நாட்டைச் சேர்ந்த இருவர் மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் கல்யாண் எனும் பகுதியில் வசித்து வருகிறார் அசோக் கவுதம் (57). இவர் அண்ணா ஹசாரே தலைமையில் நடக்கும் பல்வேறு போராட்டங்களில் பங்கு பெற்றிருக்கிறார். இவர் அந்தப் போராட்டங்கள் குறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.

இவர் தற்போது, ஹசாரே ஆரம்பித்துள்ள 'நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசரச் சட்ட'த்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களாக, ஹசாரேவை கொன்றுவிடப்போவதாக இவரின் பேஸ்புக் பக்கத்துக்கு மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், கனடாவைச் சேர்ந்த அகன் விது மற்றும் அவரது நண்பர் நீல் ஆகிய இருவரும், இந்தியாவுக்கு வந்து அண்ணா ஹசாரேவை சுட்டுக் கொன்றுவிடுவதாக மிரட்டுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

அந்தப் புகாரின் அடிப்படையில், அவர்கள் இருவர் மீதும், இந்திய தண்டனைச் சட்டம் 506(2) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹசாரேவுக்கு எந்த கணினியில் இருந்து மிரட்டல் விடுத்துள்ளனர் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு அந்த கணினியின் ஐ.பி. முகவரியை சைபர் பிரிவு போலீஸாரின் உதவியுடன் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x