Last Updated : 20 Mar, 2015 08:53 AM

 

Published : 20 Mar 2015 08:53 AM
Last Updated : 20 Mar 2015 08:53 AM

பெண்கள் குறித்த கருத்து நிற வேற்றுமையை குறிக்காது: சரத் யாதவ் விளக்கம்

கடந்த மார்ச் 16-ம் தேதி மாநிலங்களவையில் பேசிய ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், பெண்களின் நிறத்தைப் பொறுத்து அவர்கள் வேற்றுமை பாராட்டப்படுகின்றனர், தென் இந்தியாவில் கருப்பு நிற பெண்கள் அதிகம் உள்ளனர் என கூறினார். அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கூறியதாவது:

அந்நிய முதலீட்டு மசோதா மீது பெண்களை சம்பந்தப்படுத்தி பேச வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது?

கட்டாயத்தின்பேரில் பேசவில்லை, நம் நாட்டில் உணவு, உடை, கலாச்சாரம், விளையாட்டு என அனைத்திலும் வெளிநாட்டினரின் ஆதிக்கம் நம்மை வெற்றி கொண்டுவிட்டது. இதனால் அந்நிய முதலீடின்றி நாம் வளர முடியாது என்ற நிலையை உருவாக் கும் முயற்சி நடக்கிறது. இந்த விஷயத்தை குறிப்பிட்டபோது, தென் இந்தியா மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள கருப்பு நிறத்தினரின் நிலையை எடுத்துரைத்தேன். இவர்கள் எண்ணிக்கை 85 சதவீதம் ஆகும்.

இந்த விஷயத்தில் நீங்கள் சொல்ல வரும் செய்தி என்ன?

நம் நாட்டை சுமார் 400 ஆண்டுகள் ஆண்ட ஆங்கிலேயர்களின் ஒவ்வொரு செயல்பாடும் நம் மனதில் பதிந்து விட்டன. இதை குறிப்பிட்டபோது இங்கு போல் தென் இந்தியாவில் எந்த விஷயத்துக்கும் குறை இல்லை. அவர்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் கலை மற்றும் இசை மீது அதிக ஆர்வம் உண்டு. அங்கு ஆண், பெண் என இருபாலர்களும் நல்ல தேகநலன் கொண்டவர்கள். இதை குறிக்கும் வகையில் தென் இந்திய பெண்களின் உடல்வாகு நல்ல தோற்றம் தரக் கூடியது எனவும் தெரிவித்தேன். பாலிவுட்டில் உள்ள பெரும்பாலான நட்சத்திரங்கள் தென் இந்தியர்களே.

திருமண வரன் தேடும் விளம்பரங் களை தென் மற்றும் வட இந்தியாவில் படித்தீர்களானால், அவை அனைத் திலும் நிறம் வெள்ளையாக இருப் பதையே விரும்புவார்கள். வெள்ளை யாக இருப்பவருக்கு மணமாகிவிடும். ஆனால் நன்கு படித்த அறிவுள்ள கறுப்பு நிற பெண்ணுக்கு 35 வயதானாலும் மணமாவது கடினமாகி விடுகிறது.

பெண்களை உதாரணமாகப் பயன்படுத்தியது சரியா? இதற்கு தமிழகப் பெண்கள் இடையே கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளதே?

இவ்வாறு அவர்கள் எண்ணுவது தவறு. அந்த விஷயத்தில் விவாதத் துக்கு தயாராக இருக்கிறேன். பெண் களைக் குறிப்பிட்டு பேசவில்லை. பொதுப்படையாகத்தான் பேசினேன். பத்திரிகைகள் பெண்களை சேர்த்து செய்தி வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி விட்டன. அந்தக் காலத்தில் வெளியான மீரா எனும் திரைப்படத்தில் ‘எனது வெள்ளை நிறத்தை பெற்றுக் கொண்டு எனக்கு கறுப்பு நிறத்தை கொடுத்து விடு!’ என லதா மங்கேஷ்கர் பாடிய பாடலும் உண்டு.

தென் இந்தியப் பெண்கள் மீதான உங்கள் கருத்து நிறவேற்றுமையை குறிப்பதாக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளாரே?

இல்லவே இல்லை. எனது கருத்து நிறவேற்றுமையை குறிக்காது. ஆனால், நிறவேற்றுமை உலகம் முழுவதும் நீடிப்பது உண்மை. இதன் காரணமாகத்தான் ஆப்ரஹாம் லிங்கன் துப்பாக்கி குண்டால் துளைக்கப்பட்டார். அதன் பிறகுதான் கறுப்பருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்காவில் 70 சதவீதம் பேர் வெள்ளையர் களாக இருப்பினும் இன்று வெள்ளை மாளிகையில் அதிபராக இருப்பவர் கருப்பினத்தை சேர்ந்தவர்.

இந்த விஷயத்தில் நீங்கள் மன்னிப்பு கேட்கும் வரை, நீங்கள் தமிழகம் வரும்போது தமிழர்கள் வரவேற்பு அளிக்க மாட்டார்கள் என சிலர் கூறியுள்ளனரே?

இது மிகவும் தவறான எண்ணம் ஆகும். நான் யாரையும் குறிப்பிட்டு கூற வில்லை. பொதுவான கருத்தை பற்றித் தான் பேசினேன். என்னை யார் தவ றாகப் பேசினாலும் கவலை இல்லை.

உங்கள் கருத்தை திமுக உறுப்பினர் கனிமொழி எதிர்த்தாரே?

இல்லை! அவர் எனது பேச்சை எதிர்க்கவில்லை. நான் மசோதா பற்றி சொல்ல வந்ததை கூறும்படிதான் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகத் தானே அர்த்தம்?

கனிமொழிக்கு என்னைப் பற்றி முழுமையாக தெரியாது. நான் 42 ஆண்டுகள் எம்பியாக இருந்து வருகி றேன். ஒரு விஷயத்தை பற்றி பேசும்போது பல பிரச்சினைகளை எழுப்புவேன்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின்போது கூந்தலை விமர்சனம் செய்தது குறித்து?

அந்த மசோதாவில் நான் பெண்களுக்கு சாதகமாகப் பேசினேன். அனைத்து தரப்பு பெண்களுக்கும் பலன் கிடைக்க வேண்டும். நகரத்தில் உள்ள பெண்கள் கூந்தலை குறைத்து பாப் வெட்டிக் கொள்கிறார்கள் (இது அந்த சமயத்தில் புதிதாக பாப் வெட்டிக் கொண்ட மாயாவதியை குறிப்பிட்டு பேசியதாக சர்ச்சை எழுந்தது) என்பதால் அவர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு. கிராமப்புறங்களில் நீண்ட கூந்தலை கொண்டவர்கள் பெண்கள் இல்லையா எனக் கேள்வி எழுப்பி இருந்தேன். இதில் என்ன தவறு உள்ளது?

தமிழகத்தில் கிளம்பியுள்ள சர்ச்சையை எப்படி முடித்து வைக்கப் போகிறீர்கள்?

எனது பேட்டியை நீங்கள் வெளியிடுவதன் மூலம் எனது பேச்சின் மீது கிளம்பிய சர்ச்சை முற்றுப்பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x