Published : 30 Mar 2015 08:44 AM
Last Updated : 30 Mar 2015 08:44 AM

பிஹார் மாநிலத்தில் இன்னொரு அதிர்ச்சி: போலீஸ் கான்ஸ்டபிள் உடல் தகுதித் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 1,000 பேர் கைது

பிஹார் மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் நியமனத்துக்கு நடந்த உடல் தகுதி தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

பிஹார் மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரு தேர்வு மைய கட்டிடத்தில் ஏராள மானோர் ஏறி, மாணவர்கள் காப்பி அடிக்க துண்டு சீட்டுகள் (பிட்) கொடுத்தனர். முறைகேட்டில் ஈடு பட்ட மாணவர்கள், பிட் வழங்கிய பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

இந்தப் பரபரப்பு அடங்குவதற் குள், மாநில போலீஸ் கான்ஸ்ட பிள் நியமனத்துக்கான உடல் தகுதி தேர்வு மற்றும் ஆவணங்கள் சரி பார்ப்பின்போது ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் நேற்று கூறியதாவது:

பிஹார் மாநிலத்தில் 11,783 கான்ஸ்டபிள்கள் நியமனத்துக் கான நடவடிக்கைகள் கடந்த ஆண்டு தொடங்கின. மாநில கான்ஸ்டபிள் தேர்வு வாரியம் எழுத்துத் தேர்வு நடத்தியது. அப்போது ஆள் மாறாட்டம் செய்த 150 பேர் கைது செய்யப்பட்டனர். எழுத்து தேர்வில் 52 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு உடல் தகுதி தேர்வு மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு கடந்த 13 நாட்களாக நடந்தது. பாடலிபுத்ரா விளையாட்டு மைதானத்தில் ஆவணங்கள் சரிபார்ப்பு நடந்தது. கடந்த சனிக்கிழமை ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்தது.

உடல் தகுதி தேர்வின் போது பலர் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டனர். பலர் போலி ஆவணங்களை சமர்ப்பித்தனர். கடந்த 16-ம் தேதியில் இருந்து 28-ம் தேதி வரை நடந்த தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 1,068 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு முன்னர் இந்தளவுக்கு இப்படி நடந்ததில்லை. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர், உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக ஆள் மாறாட்டம் செய்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை சிறையில் அடைத்துள்ளோம்.

இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x