Published : 26 Mar 2015 08:37 AM
Last Updated : 26 Mar 2015 08:37 AM
மத்தியப் பிரதேசத்தில் நடந்த ஆசிரியர் நியமன முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்ட ஆளுநரின் மகன், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு இல்லத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு (வியாபம் மோசடி) நடந்ததாகப் புகார் எழுந்தது. இதில் மாநில ஆளுநர் ராம் நரேஷ் யாதவ், அவரது மகன் ஷைலேஷ் யாதவ், ஆளுநர் மாளிகை அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதாக பரபரப்பு புகார் எழுந்தது. இதுகுறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பணம் வாங்கிக் கொண்டு தங்களுக்கு வேண்டிய 10 பேருக்கு நியமனம் வழங்க நிர்ப்பந்தம் கொடுத்ததாக, ஷைலேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஆளுநர் ராம் நரேஷ் யாதவின் அரசு இல்லத்தில், ஷைலேஷ் யாதவ் (50) நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து கவுதம்பள்ளி போலீஸ் நிலைய அதிகாரி வீரேந்திர பகதூர் சிங் கூறும்போது, ‘‘லக்னோவின் மால் அவென்யூவில் உள்ள இல்லத்தில் ஷைலேஷ் இறந்து கிடந்த தகவல் வந்தது. அவரது மரணத்துக்கான காரணம் குறித்து உடனடியாக கூறுவதற்கு எதுவும் இல்லை’’ என்றார்.
தகவல் அறிந்தவுடன் இல்லத்துக்கு சென்று பார்த்த ஆளுநரின் குடும்ப நண்பரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சத்தியதேவ் திரிபாதி கூறும்போது, ‘‘மோசடிப் புகாரில் தனது பெயர் சேர்க்கப்பட்டதில் இருந்தே ஷைலேஷ் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தார். அவரது மரணத்துக்கு அதுதான் காரணமாக இருக்கும்’’ என்றார்.
இதற்கிடையே, ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் மூச்சுத் திணறல் காரணமாக போபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச முதல்வராகப் பதவி வகித்த ராம் நரேஷ் யாதவ், தன் மீதான குற்றச்சாட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வியாபம் முறைகேடு
மத்தியப் பிரதேசத்தில் ஆசிரியர்கள், போலீஸ் கான்ஸ்டபிள்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், வனக் காவலர்கள், சிறைக் காவலர்கள், உணவு ஆய்வாளர்கள் போன்ற பல பணியிடங்களுக்கான தேர்வுகள் ‘வியாபம்’ தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படுகின்றன. (வியாபம் - ‘வியவசாயிக் பரீக்ஷா மண்டல்’ என்பதன் சுருக்கம்).
1970-ல் மருத்துவக் கல்வி தேர்வு வாரியமாக அம்மாநில அரசால் தொடங்கப்பட்டது. 1981-ல் பொறியியல் கல்வித் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டது. 1982-ல் இந்த இரண்டு தேர்வு வாரியங்களையும் இணைத்து, தொழில் படிப்புகள் தேர்வு வாரியமாக (Professional Examination Board) உருவாக்கப்பட்டது.
‘வியாபம்’, மாநில அரசின்கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். இந்தத் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பலர் லஞ்சம் கொடுத்து வென்றதாக வெளியான தகவலையடுத்து, இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த முறைகேட்டில் உமாபாரதி போன்ற பாஜக மூத்த தலைவர்களுக்கும், சுரேஷ் சோனி, கே.எஸ்.சுதர்ஸன் போன்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அந்த மாநிலத்தின் முன்னாள் கல்வித் துறை அமைச்சர் லட்சுமிகாந்த் சர்மா உட்பட இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT