Published : 03 Mar 2015 12:02 PM
Last Updated : 03 Mar 2015 12:02 PM

பலாத்காரத்துக்கு யார் பொறுப்பு?- நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற இளைஞரின் பார்வை

டெல்லியின் இளம் பெண்கள் ஒன்று திரண்டு 'என் உடல்.. என் உரிமை..' என்ற கோஷத்துடன் ஜனாதிபதி மாளிகையின் வாயில் கதவை நியாயத்துக்காக அசைத்துப் பார்க்க வைத்த சம்பவம் என்றால் அது ஓடும் பஸ்சில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டதே.

"ஒரு கை ஓசை எழுப்ப முடியாது. இரண்டு கைகளும் சேர்ந்து தட்டினால்தான் ஓசை வரும். நாகரிகமான இளம்பெண் இரவு 9 மணிக்கு வெளியில் சுற்றிக் கொண்டிருக்க மாட்டாள்."

டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த வழக்கில் தண்டனை பெற்ற இளைஞர், "பலாத்காரத்துக்கு ஆணை விட பெண்ணுக்கே அதிக பொறுப்பு உள்ளது. தூக்கு தண்டனை வழங்கினால், எதிர்காலத்தில் இதைவிட மோசமான பலாத்காரம் நடக்கும்" என்று பேட்டி அளித்துள்ளார்.

கடந்த 2012, டிசம்பர் 16-ம் தேதி இரவு..

தெற்கு டெல்லி அருகில் உள்ள முனிர்கா பகுதியில் ஆண் நண்பருடன் 'பிசியோதெரபி' மருத்துவ மாணவி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தார். அந்த வழியாக தனியார் பேருந்தில் வந்த இளைஞர்கள், அவர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், பேருந்தில் ஆண் நண்பரை பயங்கரமாகத் தாக்கினர். இளம்பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்தனர். பின்னர் இருவரையும் நிர்வாணமாக சாலையில் வீசி சென்றனர்.

தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல், 13 நாட்கள் கழித்து சிங்கப்பூர் மருத்துவமனையில் அந்த மாணவி (நிர்பயா என்று பின்னர் பெயரிட்டனர்) பரிதாபமாக இறந்தார். நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய அந்த சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த சம்பவத்தில் தண்டனை பெற்றவர்களில் ராம்சிங் என்பவர் திஹார் சிறையில் இறந்தார். ‘மைனர்’ என்று கருதப்பட்ட சிறுவன் ஒருவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. முகேஷ் சிங் (26) என்ற இளைஞர் உட்பட 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் தூக்கு தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நான்கு பேரும் மேல்முறையீடு செய்துள்ளனர்.

பலாத்காரம் நடந்த போது முகேஷ் சிங்தான் பேருந்தை ஓட்டி இருக்கிறார். இந்த வழக்கு விசாரணையின் போது, தனக்கும் பலாத்காரத்துக்கும் தொடர்பில்லை என்று வாதாடினார். அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. பலாத்காரத்தில் பங்கேற்கவில்லை என்றாலும், அதை தடுத்திருக்கலாம். பேருந்தை நிறுத்தி இருக்கலாம் என்று நீதிபதி கூறினார். மேலும், பலாத்காரத்தில் முகேஷ் சிங்குக்கும் தொடர்பிருப்பது மரபணு (டிஎன்ஏ) சோதனையில் உறுதியாகத் தெரிய வந்துள்ளது என்றும் நீதிபதி கூறினார்.

இந்நிலையில், பிபிசி தொலைக்காட்சியில் "இந்தியாவின் மகள்" என்ற தலைப்பில் ஒளிபரப்புவதற்காக, சிறையில் உள்ள முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுத்துள்ளனர். இந்த பேட்டி வரும் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாக உள்ளது. அன்றைய தினம் சர்வதேச மகளிர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பேட்டியை இங்கிலாந்தில் வெளியாகும் 'டெலிகிராப்' பத்திரிகை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ளது.

பேட்டியில் முகேஷ் சிங் கூறியிருப்பதாவது:

பலாத்காரம் நடைபெறுவதற்கு ஆணை விட பெண்ணுக்குதான் அதிக பொறுப்பு உள்ளது. இரவு நேரத்தில் வெளியில் சுற்றித் திரியும் பெண்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். அவர்கள்தான் ஆண்களை கவர்ந்திழுக்கிறார்கள். பலாத்காரத்துக்கு உள்ளான பெண்ணும் அவருடைய ஆண் நண்பரும் சண்டை போட்டிருக்க கூடாது. அவர்கள் திருப்பி தாக்கியதால்தான், அந்த கும்பல் அவர்களை கொடூரமாக தாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அன்று நடந்தது ஒரு விபத்துதான். பலாத்காரம் நடக்கும் போது அந்தப் பெண் திருப்பி சண்டை போட்டிருக்க கூடாது. அமைதியாக இருந்திருக்க வேண்டும். பலாத்காரத்துக்கு அனுமதித்து இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் எல்லாம் முடிந்த பிறகு அந்தப் பெண்ணை கும்பல் பேருந்தில் இருந்து இறக்கி விட்டிருக்கும். ஆண் நண்பரை மட்டும் தாக்கி இருக்கும்.

ஒரு கை ஓசை எழுப்ப முடியாது. இரண்டு கைகளும் சேர்ந்து தட்டினால்தான் ஓசை வரும். நாகரிகமான இளம்பெண் இரவு 9 மணிக்கு வெளியில் சுற்றிக் கொண்டிருக்க மாட்டாள். எனவேதான் பலாத்கார விஷயத்தில் ஆணை விட பெண்ணுக்கே அதிக பொறுப்புள்ளது என்கிறேன். ஆணும் பெண்ணும் சமம் அல்லர். வீட்டு வேலைகள், வீட்டைப் பராமரிப்பதுதான் பெண்களின் வேலை. அரை குறை ஆடை அணிந்து கொண்டு டிஸ்கோக்களுக்கும் பார்களுக்கும் இரவு நேரங்களில் சென்று தவறான செயல்களில் ஈடுபடுவது பெண்களின் வேலை இல்லை. வெறும் 20 சதவீத பெண்கள்தான் நல்லவர்களாக இருக்கின்றனர்.

என்னையும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் தூக்கில் போட்டால், எதிர்காலத்தில் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண்களுக்குதான் அதிக ஆபத்து ஏற்படும். மரண தண்டனைப் பெண்களுக்கு பிரச்சினையை மேலும் பயங்கரமாக்கி விடும். இதற்கு முன்பெல்லாம் பலாத்காரம் நடந்த போது அதில் ஈடுபட்டவர்கள், ‘அவளை விட்டுவிடு.. வெளியில் யாரிடமும் சொல்ல மாட்டாள்’ என்பார்கள். இனிமேல் பலாத்காரம் செய்தால், சம்பந்தப்பட்ட பெண்ணைக் கொன்று விடுவார்கள்.

இவ்வாறு முகேஷ் சிங் கூறியுள்ளார்.

இவரைப் போலவே இவர் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடிய ஏ.பி. சிங் என்பவரும் பெண்களைப் பற்றி கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்கு முன்பு ஒரு பேட்டியில் ஏ.பி.சிங் கூறும்போது, "என் மகளோ சகோதரியோ திருமணத்துக்கு முன்பு இதுபோல் வேறு ஒரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்தால், பண்ணை வீட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்திருப்பேன்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x