Published : 31 Mar 2015 08:30 AM
Last Updated : 31 Mar 2015 08:30 AM

வரியை வசூலிக்க வீட்டு முன்பு குப்பை வண்டியை நிறுத்தியதால் அவமானம் தாங்காமல் விவசாயி தற்கொலை

ஆந்திராவில் வீட்டு வரி பாக்கியை செலுத்த வலியுறுத்தி குப்பை வண்டியை தனது வீட்டு முன்பு நகராட்சி அதிகாரிகள் நிறுத் தியதால் அவமானம் தாங்காமல் விவசாயி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்தூர் மாவட்டம், புங்கனூர் நகராட்சிக்கு உட்பட்ட எஸ்.எஸ். பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆதிநாராயணா (46). இவர் அதே பகுதியில் கோழி பண்ணை நடத்தி வந்தார். இதற்காக நகராட்சிக்கு இவர் ரூ.4.5 லட்சம் வரி பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் மார்ச் மாத இறுதிக்குள் முழு வரியையும் கட்டாயமாக செலுத்த வலியுறுத்தி நகராட்சி அதிகாரிகள் கடந்த 15 நாட்களில் 3 முறை நோட்டீஸ் வழங்கி உள்ளனர். மேலும் நகராட்சி அதிகாரிகள் ஆதிநாராயணாவை பல முறை நேரில் சந்தித்தும் இதுதொடர்பாக எச்சரித்துள்ளனர்.

இம்மாத இறுதிக்குள் வரி பாக்கியை செலுத்துவதாக ஆதி நாராயணா உறுதி அளித்துள்ளார். ஆனால் பல இடங்களில் கேட்டும் அவருக்கு கடன் கிடைக்க வில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஆதிநாராயணா வின் வீட்டு முன்பு குப்பை வண்டியை நிறுத்திய நகராட்சி அதிகாரிகள், வரி செலுத்தும் வரை குப்பை வண்டி இங்கேதான் இருக்கும் என்று கூறி உள்ளனர்.

இதனால் அவமானத் துக்குள்ளான ஆதிநாராயணா, தனது கோழி பண்ணையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர் இது குறித்து உடனடியாக புங்கனூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் எஸ்.ஐ. ராஜசேகர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக புங்கனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து புங்கனூர் நகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, “மார்ச் மாத இறுதிக்குள் இந்த நிதியாண்டின் கணக்கை முடிக்க வேண்டியிருப்பதால், வரி பாக்கியை வசூல் செய்ய வேண்டும் என்று மேல் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதனால்தான் ஆதிநாராயணாவிடம் உடனடி யாக வரி பாக்கியை செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தி னோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x