Published : 02 Mar 2015 12:50 PM
Last Updated : 02 Mar 2015 12:50 PM
ஆம் ஆத்மி கட்சிக்குள் பூசல் ஏற்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள அனைத்து தகவல்களும் கற்பனைக் கதைகளே என அக்கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தலில் மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னர் மக்களுக்குப் பணியாற்றும் இவ்வேளையில் சிறிய சச்சரவுகளுக்கு இடம்தர கட்சி விரும்பவில்லை என்றார்.
யோகேந்திர யாதவ் கூறியதாவது: என்னைப் பற்றியும், பிரசாந்த் பூஷன் குறித்தும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இத்தகைய செய்திகளால் வருத்தமடைகிறேன். அதேவேளையில் இச் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை என்பதால் அவை நகைப்புக்குரியனவாகவும் உள்ளன. இத்தகைய கதைகளை திரித்துக் கூறுபவர்களுக்கு நிறைய கால அவகாசம் இருக்க வேண்டும் என்பதை உணர முடிகிறது. ஆனாலும், இக்கதைகள் திரிக்கப்பட்டதன் சதி பின்னணி வருத்தமளிக்கிறது. டெல்லி மக்கள் எங்களுக்கு பெரும்பான்மை வெற்றி அளித்துள்ளனர். எங்கள் மீது இந்த தேசமே பலத்த எதிர்பார்ப்பு கொண்டுள்ளது. இது மக்களுக்குப் பணியாற்றும் நேரம். இவ்வேளையில் சிறிய சச்சரவுகளுக்கு இடம்தர விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பூஷன் கிளப்பிய சர்ச்சை என்ன?
"ஆம் ஆத்மி கட்சியில் அனைத்து அதிகாரங்களும் ஒரு தனி நபரிடமே உள்ளன. ஒரு நபர் மையப்படுத்திய அதிகாரம் தேர்தல் பிரச்சாரத்துக்கு வேண்டுமானால் எடுபடலாம் ஆனால் காலப்போக்கில் அது நன்மை பயக்காது. ஒரு நபர் ஆளுமையில் இருந்து விடுபட வேண்டிய தருணம் வந்துவிட்டது" என ஆம் ஆத்மி கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர்களுக்கு பிரசாந்த் பூஷன் அண்மையில் கடிதம் எழுதியிருக்கிறார்.
மேலும், அக்கடிதத்தில், இதே பிரச்சினை தொடர்பாக 7 மாதங்களுக்கு முன்னதாக யோகேந்திர யாதவ் கருத்து கூறியிருப்பதாகவும் மேற்கோள் காட்டியிருக்கிறார்.
பிரசாந்த் பூஷனின் இக்கடிதமே, ஆம் ஆத்மி கட்சிக்குள் பூசல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகக் காரணம் என கூறப்படுகிறது.
4-ம் தேதி தேசிய செயற்குழு கூடுகிறது:
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அர்விந்த் கேஜ்ரிவாலை நீக்குவதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டு வருவதகாவும் இது தொடர்பாக ஆலோசிக்க ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என்றும் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT