Last Updated : 13 Mar, 2015 09:28 AM

 

Published : 13 Mar 2015 09:28 AM
Last Updated : 13 Mar 2015 09:28 AM

கர்நாடக மாநிலம் ஹம்பி நகரில் அமைந்துள்ள விட்டலா, விருப்பாக் ஷா கோயில்களுக்கு அங்கீகாரம்: விரைவில் மாதிரி நினைவு சின்னங்களாகின்றன

கர்நாடக மாநிலம் ஹம்பி நகரில் அமைந்துள்ள விஜய விட்டலா, விருப்பாக் ஷா கோயில்களுக்கு, தாஜ்மஹால் போல நாட்டின் மாதிரி நினைவுச் சின்னம் (ஆதர்ஷ் சமரக்) அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிற‌து.

இதனால் ஹம்பியின் முக்கியப் பகுதிகளில் சர்வதேச‌ தரத்திலான சுற்றுலா வசதிகள் வேகமாக மேற்கொள்ளப்படுகிறது.

கர்நாடக மாநிலம் ஹம்பியில் விஜயநகரப் பேரரசு கால கோயில்கள், கோபுரங்கள், சிற்பங்கள் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்கள் நிறைந்துள்ளன. துங்கபத்ரா ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் ஹம்பி நகரில் உள்ள கலைநயம் மிகுந்த பழங்கால கோயில்களும், தொல் பொருள் சிறப்புமிக்க சிற்பங்களும் உலக அளவில் புகழ்பெற்றுள்ளன.

இதனால் வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மட்டு மில்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகளவில் ஹம்பியை கண்டு ரசிக்கின்றனர். இது தவிர சர்வதேச வரலாற்று ஆய்வாளர்களும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் ஹம்பியை வியந்து பார்ப்பதால், யுனெஸ்கோ வின் உலக பாரம்பரிய அங்கீகாரம் கிடைத்தது.

ஆனால் ஹம்பியின் வரலாற்று சின்னங்களை பாதுகாக்கவும், புதுப்பிக்கவும், நவீன வசதிகளை மேற்கொள்ளவும் மத்திய, மாநில அரசுகள் போதிய நிதியை ஒதுக்குவதில்லை. உலகெங்கும் ஹம்பியின் புகழைப் பரப்பவும், ச‌ர்வதேச சுற்றுலா தலமாக மாற்றவும் அவை முயற்சிக்கவில்லை என வரலாற்று ஆய்வாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

நினைவு சின்னம் அங்கீகாரம்

இந்நிலையில் ஹம்பி வட்டார தொல்பொருள் ஆராய்ச்சித்துறையின் துணை கண்காணிப்பாளர் என்.சி.பிரகாஷ் நயகண்டே, 'தி இந்து'விடம் கூறியதாவது:

தாஜ்மஹால், செங்கோட்டை, மகாபலிபுரம் சிற்ப கோயில் உட்பட நாட்டின் 24 முக்கிய வரலாற்று சின்னங்களுக்கு மத்திய அரசின் கலாசார அமைச்சகம் 'மாதிரி நினைவு சின்னம்' (ஆதர்ஷ் சமரக்) அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

கர்நாடகத்தில் பட்டதக்கல் இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளதால் அங்கு சர்வதேச சுற்றுலாவுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விஜயநகர பேரரசின் கலைநயத்தை வெளிப்படுத்தும் வரலாற்று சிறப்புமிக்க சின்னங்கள் நிறைந்த‌ ஹம்பி விருப்பாக் ஷா, விட்டலா கோயில்களுக்கு விரைவில் உரிய அங்கீகாரம் கிடைக்கும்'' என்றார்.

மத்திய அரசின் அங்கீகாரத்தை பெறுவதற்காக ஹம்பியில் அமைந்துள்ள ஆனேகுந்தி, கமலாபுரா நுழைவாயில், ஹம்பி சந்திப்பு, விருப்பாக் ஷா கோயில், விஜய‌ விட்டலா கோயில் உள்ளிட்ட 6 இடங்களின் தரம் உயர்த்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x