Last Updated : 15 Mar, 2015 11:02 AM

 

Published : 15 Mar 2015 11:02 AM
Last Updated : 15 Mar 2015 11:02 AM

வழக்கறிஞர்கள் தாக்கியதால் தற்காப்புக்காகச் சுட்டேன்: கைதான சப்-இன்ஸ்பெக்டர் வாக்குமூலம்

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள நரி பாரி எனும் இடத்தில் அமைந்திருக்கும் காவல் நிலையத்தில் எஸ்.ஐ. ஆக பணியாற்றி வருபவர் சைலேந்திர குமார் சிங்.

கடந்த புதன்கிழமை இவர் ஒரு வழக்கு விசாரணைக்காக அலகாபாத் மாவட்ட நீதிமன்றம் ஒன்றுக்கு வந்திருந்தார். அப்போது சில வழக்கறிஞர்கள் அவரைத் தாக்கினர். அதனைத் தொடர்ந்து அவர் தன்னிடமிருந்த துப்பாக்கியால் வழக்கறிஞர் ஒருவரைச் சுட்டார். அதில் அந்த வழக்கறிஞர் உயிரிழந்தார். அதனால் நகரம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் அங்கிருந்து தப்பிய அவர், இரண்டு நாட்கள் தலைமறைவாக இருந்தார்.

இந்நிலையில், நேற்று பரயாக் ரயில்வே நிலையத்தில் கைது செய்யப்பட்ட அவர், நைனி மத்திய சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார். பின்னர், அவர் கூடுதல் எஸ்.பி. ராஜேஷ் குமார் யாதவிடம் நேற்று அளித்த வாக்குமூலத்தில், ‘‘எனக்கும் வழக்கறிஞர்கள் சிலருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்களில் சிலர் என்னைத் தாக்கினர். நான் அவர்களிடமிருந்து தப்பிக்க காற்றில் சுட முயற்சித்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக வழக்கறிஞர் ஒருவர் மீது தவறுதலாக குண்டு பாய்ந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

மேலும், “நான் அங்கேயே இருந்திருந்தால், அங்கிருந்த கூட்டம் என்னை அடித்தே கொன்றிருக்கும். ஆகவே அங்கிருந்து தப்பித்தேன். எனினும், நரிபாரி காவல் நிலையத்துக்கு வந்து என்னுடைய துப்பாக்கியை ஒப்படைத்துவிட்டே நான் லக்னோவில தலைமறைவாக இருந்தேன்'’ என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையே தன் கணவரைத் தாக்கிய வழக்கறிஞர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி சிங்கின் மனைவி சப்னா, காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x