Published : 14 Mar 2015 10:05 AM
Last Updated : 14 Mar 2015 10:05 AM
மும்பை தாக்குதல் தீவிரவாதி ஜகியுர் ரஹ்மான் லக்வி விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் தூதரை அழைத்து மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
லக்விக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தில் போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்றும் மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜுஜு டெல்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
லக்விக்கு எதிரான வழக்கை பாகிஸ்தான் போலீஸார் வேண்டுமென்றே வலுவிழக்கச் செய்துள்ளனர். அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. அதனால்தான் ஆதாரம் இல்லை என்று கூறி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.
எல்லோருமே தீவிரவாதிகள்தான்
தீவிரவாதிகளில் நல்லவர், கெட்டவர் என்பது கிடையாது. நாச வேலைகளில் ஈடுபடும் எல்லோருமே தீவிரவாதிகள்தான். லக்வியை விடுதலை செய்யக்கூடாது என்று பாகிஸ்தான் அரசிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.
இப்போது எங்களது கண்டனத்தை அழுத்தமாக தெரியப்படுத்தியுள்ளோம் என்றார்.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: மும்பை தாக்குதல் சம்பவத்தின்போது கராச்சி கட்டுப்பாட்டு அறையில் இருந்து தீவிரவாதிகளுக்கு லக்வி உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதற்கான வலுவான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் அளித்துள் ளோம்.
அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட டேவிட் ஹெட்லி, தீவிரவாதி அஜ்மல் கசாப், கராட்சி கட்டுப்பாட்டு அறையை அமைத்துக் கொடுத்த அபு ஜிண்டால் ஆகியோர் லக்விக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளனர். அனைத்து ஆதாரங்களையும் அளித்த பிறகும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தப் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் நேற்று இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு வரவழைக்கப்பட்டார். அவரிடம் மத்திய அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மேலும் லக்வியின் விடுதலை குறித்து விரிவான விளக்கம் அளிக்கும்படியும் பாகிஸ்தான் தூதரிடம் வெளியுறவுத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT