Published : 10 Mar 2015 08:29 AM
Last Updated : 10 Mar 2015 08:29 AM

ஹுரியத் தலைவர் கிலானியுடன் பாகிஸ்தான் தூதர் திடீர் சந்திப்பு: மத்திய அரசு கடும் கண்டனம்

காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பான ஹுரியத் தலைவர் சையது அலி ஷா கிலானியை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார்.

பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க மத்திய அரசு நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்தச் சந்திப்பு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கடும் கண்டனம் தெரிவித் துள்ளன.

தடைபட்ட அமைதிப் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். மோடியின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டில் இருநாடுகளின் வெளியுறவுச் செயலாளர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற இருந்தது. ஆனால், அதற்கு முன்பாக காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பின் தலைவர்களை பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் டெல்லிக்கு வரவழைத்துப் பேசினார்.

இதன்காரணமாக வெளி யுறவுச் செயலாளர்கள் பேச்சுவார்த் தையை மத்திய அரசு கடைசி நேரத்தில் ரத்து செய்தது. கடந்த 7 மாதங்களாக இருதரப்பிலும் எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.

ஜெய்சங்கர்- நவாஸ் சந்திப்பு

இந்நிலையில், இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள ஜெய்சங்கர் தடைபட்ட அமைதிப் பேச்சுவார்த் தையை மீண்டும் தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

சார்க் நாடுகள் சுற்றுப் பயணத் திட்டத்தில் அண்மையில் அவர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றார். அங்கு அந்த நாட்டு வெளியுறவுச் செயலாளர் ஆசிஷ் அகமது சவுத்ரியை சந்தித்து தடைபட்ட அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபையும் அவர் சந்தித்துப் பேசினார். அப்போது இந்திய பிரதமர் மோடி எழுதிய கடிதத்தை நவாஸிடம் அவர் அளித்தார்.

மீண்டும் பின்னடைவு

இந்தியாவின் நல்லெண்ண நடவடிக்கையால் இருநாடு களிடையே விரைவில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், காஷ்மீரில் பிரிவினைவாதத்தை தூண்டி வரும் ஹுரியத் அமைப்பின் தலைவர் சையது அலி ஷா கிலானியை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் நேற்று சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது.

பின்னர் நிருபர்களிடம் கிலானி கூறியதாவது:

இந்திய - பாகிஸ்தான் பேச்சு வார்த்தையில் காஷ்மீர் விவகாரம் தான் முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்திடம் வலியுறுத்தி னேன்.

ஜம்மு-காஷ்மீர் ஒரு பிரச்சினைக்குரிய பகுதி. அந்தப் பிராந்தியம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இல்லை என்பதை இந்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். மத்தியில் எந்த அரசு பதவியேற்றாலும் காஷ்மீர் நிலையில் மாற்றம் இல்லை.

ஹுரியத் அமைப்பைச் சேர்ந்த மஸ்ரத் ஆலம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பதை அரசியலாக்கி வருகின்றனர். இதை பெரிய விவகாரமாக்க வேண்டிய அவசியமில்லை.

மஸ்ரத் ஆலம் மீது ஏராளமான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவை அனைத்தையும் நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்துவிட்டது. இப்போது அவர் விடுதலை செய்யப்பட்டதில் எவ்வித தவறும் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு கண்டனம்

அப்துல் பாசித்- கிலானி சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கடந்த ஆகஸ்டில் பிரிவினை வாதத் தலைவர்களை அப்துல் பாசித் அழைத்துப் பேசியதால்தான் அமைதி பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இப்போது அதே பாதையில் பாகிஸ்தான் தூதர் செல்கிறார். அவரது நடவடிக்கை அமைதி பேச்சுவார்த்தை முயற்சியை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. என்று அந்த வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x