Published : 02 Mar 2015 12:54 PM
Last Updated : 02 Mar 2015 12:54 PM
தெலங்கானாவின் சங்கரெட்டி பகுதி வழியே செல்லும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் எரிவாயு பைப் லைனில் கசிவு ஏற்பட்டது. இதனை அடுத்து துரித நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அங்கு நேரிட இருந்த மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
தெலுங்கானாவின் காக்கிநாடாவிலிருந்து கிழக்கு கோதாவரி வழியே குஜராத்தின் பரீச் பகுதி வரை இயற்கை எரிவாயு பைப் லைன் உள்ளது. இந்த நிலையில் திங்கட்கிழமை காலை தெலங்கானாவின் மதிகுந்தா கிராமப் பகுதியில் அமைந்துள்ள பைப் லைனில் கசிவு ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து தி இந்து-விடம் சங்கரெட்டி பகுதி டி.எஸ்.பி. திருப்பட்டானா கூறும்போது, "இன்று அதிகாலை 2.30 மணியளவில் சதாசிவப்பேட்டை காவல் நிலையத்துக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பாதுகாப்பு பணியாளர் கசிவு குறித்து தகவல் அளித்தார்.
சில நிமிடங்களில் மும்பையிலிருந்து ரிலையன்ஸ் அதிகாரிகளும் குழாயில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எச்சரிக்கை அளித்தனர். அப்போது பைப்லைனிலிருந்து ஏற்பட்ட சிறு தீ உடனடியாக கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டது. கசிவால் பைப் லைனில் மேலும் பாதிப்புகள் பரவமால் இருக்க எரிவாயு குழாயில் சப்ளை நிறுத்தப்பட்டது.
முன்னெச்சரிக்கையாக இந்தரேசன் மற்றும் சாஹீராபாத் பகுதிகளில் உள்ள பைப்லைனில் துவாரம் அமைத்து காற்றில் எரிவாயு திறந்துவிடப்பட்டது. சுற்றுவட்டாரத்தில் உள்ள மதிகுண்டா பகுதி மக்களுக்கு அறிவிப்புகள் அளிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
போலீஸ் அதிகாரிகள் மற்றும் ரிலையன்ஸ் பணியாளர்களின் துரித நடவடிக்கையால், எரிவாயு கசிவினால் ஏற்பட இருந்து மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தற்போது அங்கு நிலை சீராகிவிட்டது. அச்சம் கொள்ள தேவையில்லை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT