Published : 20 Mar 2015 12:35 PM
Last Updated : 20 Mar 2015 12:35 PM
ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததற்காக மாணவனை கைது செய்தது தொடர்பாக 4 வாரங்களில் விளக்கமளிக்க உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம்கானை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட 12-ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டார்.
ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததற்காக மாணவனை கைது செய்ய காரணம் என்ன என உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உ.பி. அரசுக்கு நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை, கைது செய்யப்பட்ட மாணவன் சார்பில் ஆஜரான மூத்த நீதிபதி சோலி சோரப்ஜி, "மாணவன் கைது செய்யபட்டதன் பின்னணியில் அதிகார துஷ்பிரயோகம் இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படும் கருத்து தொடர்பான கைது நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுரை குறிப்பு அனுப்பியுள்ளது. அதை மீறி இந்த கைது நடந்துள்ளது" என்றார்.
அப்போது குறுக்கிட்ட உ.பி. அரசு தரப்பு வழக்கறிஞர், "மாணவன் பதிவு செய்த கருத்து தரக்குறைவானது, பதற்றத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதை நிரூபிக்க அரசிடம் ஆதாரம் உள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட குறிப்பிட்ட மாணவன் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்" என்றார்.
இந்நிலையில், இவ்வழக்கில் தீர்ப்பை தள்ளிவைத்த நீதிபதிகள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உ.பி. அரசுக்கு உத்தரவிட்டது.
ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பிறர் மனம் புண்படும் படியான மற்றும் அவதூறான தகவல்களை பதிவிடும் நபர்களை கைதுசெய்ய வழிவகை செய்கிறது தகவல் தொழில்நுட்ப சீர்திருத்தச் சட்டப் பிரிவு 66-ஏ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT