Last Updated : 18 Mar, 2015 08:46 AM

 

Published : 18 Mar 2015 08:46 AM
Last Updated : 18 Mar 2015 08:46 AM

மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: மாநிலங்களவையில் கனிமொழி வலியுறுத்தல்

மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவர் கனிமொழி நேற்று வலியுறுத்தினார்.

இதுகுறித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி கூறியதாவது:

தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு நீரழுத்த முறிவு முறை கையாளப்படும் எனத் தெரிகிறது.

‘ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்’ என்ற நீரழுத்த முறிவு முறை என்பது நிலத்தடி நீரை பெருமளவில் பாதிக்கும் என்றும் அதன் மூலம் குடிநீரில் வேதிப்போருட்களின் கலப்பு அதிகரிக்கும் என்றும் பல்வேறு ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

தஞ்சை காவிரி டெல்டா பகுதி தமிழக விவசாயத்தின் முக்கியமான பகுதியாகும். இங்கு உற்பத்தியாகும் அரிசிதான் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்தினால், இப்பகுதியின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் மாநில மக்களுக்கு உணவுப் பொருளை அளிக்கும் இந்த பூமி விவசாயத்துக்கே லாயக்கற்ற தரிசு நிலமாக மாறிவிடும்.

இந்தியா போன்ற எரிசக்தி பற்றாக்குறையுள்ள நாட்டுக்கு ஆக்கப்பூர்வமான எரிசக்தி திட்டங்கள் தேவை என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். ஆனால் இது போன்ற திட்டங்களுக்காக பாசன வளமுள்ள விவசாய நிலங்களும், சுற்றுச் சூழலும் பலியாவதை நாம் அனுமதிக்கக் கூடாது.

மேலும் பிரான்ஸ், ஸ்பெயின், அர்ஜென்டினா, ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகள் இத்தகைய நீரழுத்த முறிவு முறைக்கு தடை விதித்துள்ளன. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் இந்த வகையிலான எந்தத் திட்டத்துக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.

‘டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் ஹைட்ரோ கார்பன்’, முப்பது வட்டங்களை மீத்தேன் எடுக்கும் பகுதிகளாக தேர்வு செய்துள்ளது. இதில் மன்னார்குடி பகுதியில் செயல்படுத்தப்பட இருக்கும் திட்டத்தால் பாசனம் நடைபெறும் 1.75 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கும்.

விவசாயம், மக்களின் வாழ்வாதாரம், சுற்றுச் சூழல், உணவு உற்பத்தி ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x