Last Updated : 29 Mar, 2015 09:42 AM

 

Published : 29 Mar 2015 09:42 AM
Last Updated : 29 Mar 2015 09:42 AM

மும்பையில் புதிய மாபியா கும்பலின் தலைவி பேபி: போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டுள்ள இவர் ரூ.100 கோடிக்கு அதிபதி

மகாராஷ்டிர தலைநகரான மும்பையில் ‘மாபியா’ எனப்படும் கிரிமினல் கூட்டத்தின் தலைவியாக ‘பேபி’ என்கிற சசிகலா ரமேஷ் பட்டாங்கர் வளர்ந்து வருகிறார். போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டுள்ள இவர் ரூ. 100 கோடி சொத்துகளுக்கு அதிபதியாக உள்ளார்.

மும்பையில் உள்ள மெரைன் டிரைவ் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் தர்மராஜ் கலோக்கே. இந்தக் காவல் நிலையத்தில் உள்ள இவரது பூட்டிய அலமாரியில் 114 கிலோ மெப்பிட்ரோன் (Mephedrone) எனும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் இருந்ததாக இவர் கடந்த 8-ம் தேதி கைது செய்யப்பட்டார். மும்பை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, ஏப்ரல் 1-ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். விசாரணையில் பல அதிர்ச்சிகர தகவல்களை வெளியிட்டுள்ளார் தர்மராஜ்.

பேபியை காதலித்த தர்மராஜ்

விசாரணையில், பேபியும் தானும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக தர்மராஜ் கூறியுள்ளார். சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் மும்பையின் பரபரப்பான வொர்லி பகுதியில், சித்தார்த் நகர் எனும் குடிசைப் பகுதியில் தனது சொந்தபந்தங்களுடன் வசித்துள்ளார் பேபி. பிறகு போதைப் பொருள் கும்பலிடம் அறிமுகமான அவர், சிறிய அளவில் கஞ்சா பொட்டலங்களை விற்றுத் தரும் பணியில் ஈடுபட்டுள்ளார். சட்டவிரோத மற்றும் ஆபத்துமிக்க இத்தொழிலில் கிடைக்கும் மிதமிஞ்சிய லாபம் பேபியை ஈர்த்துள்ளது. இதனால் அத்தொழிலை சுயமாக செய்யும் வகையில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்குச் சென்று அங்கிருந்து போதைப் பொருட்களை கடத்தி வருவதில் ஈடுபட்டுள்ளார். இதில் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்ததுடன் தனது தலைமையில் ஒரு ‘மாபியா’ கும்பலையும் உருவாக்கி குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

போதைப் பொருள் வருமானம் மூலம் மும்பையின் முக்கியப் பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்கு மாடி வீடுகள் வாங்கியுள்ளார் பேபி. இவரிடம் தற்போது சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக மும்பை காவல் துறையிடம் தர்மராஜ் கூறியுள்ளார்.

பேபி - தர்மராஜ் மோதல்

மும்பை போதைப் பொருள் தடுப்பு காவல்துறை அதிகாரிகள் இது தொடர்பாக ‘தி இந்து’விடம் கூறும்போது, “ஒரு வழக்கு விசாரணையில் பேபிக்கு தர்மராஜின் அறிமுகம் கிடைத்தது. பின்னர் இது இவர்களிடையே காதலாக வளர்ந்துள்ளது. தர்மராஜையும் தனது தொழிலுக்கு பேபி பயன்படுத்தி வந்துள்ளார். ஒருகட்டத்தில் பேபியிடம் பெரும் பங்கு வேண்டும் என தர்மராஜ் வற்புறுத்தியதால் இருவருக்குள் மோதல் ஏற்பட்டு, தற்போது தர்மராஜை கைதாக வைத்துள்ளது.

மும்பை காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் பலரின் நட்பையும் பேபியின் போதை மருந்து கடத்தலுக்கு தர்மராஜ் பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.

உளவாளியாக பேபி

சிறிய அளவிலான போதைப் பொருள் கடத்தலில் போலீஸாரிடம் பலமுறை சிக்கிய பேபி, அந்த அறிமுகத்தை பயன்படுத்தி அது பற்றிய தகவல் கூறும் உளவாளியாகவும் இருந்துள்ளார். இவரது சகோதரரான விக்கி மச்காவ்கர், மும்பையில் சங்கிலி பறிக்கும் பிரபல திருடர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி 30 கிராம் மெப்பிட்ரோன் கடத்தும்போது, பேபி தனது உறவினர்கள் இருவருடன் போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டார். எனினும் இதில் பேபி மட்டும் சிக்காமல் தலைமறைவாகி விட்டார். பேபியின் மருமகள் சரிகா, சகோதரரின் மகன் உபேந்திரா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே போலீஸாரிடம் சிக்காமல் தப்பிய பேபி, தனது தொழிலை சித்தார்த் நகரில் நான்கு குடிசைகளில் தனது உறவினர்கள் உதவியுடன் ரகசியமாக தொடர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. நடந்து செல்வதற்கே சிரமமான குறுகலான சந்துகள் கொண்ட சித்தார்த் நகரில் போலீஸார் நுழைவது மிகவும் கடினம். இந்நிலையில் போலீஸார் வரும் தகவல் அறிந்து ஒவ்வொருமுறையும் பேபி தப்பி விடுவதாக கூறப்படுகிறது. என்றா லும் பேபி விரைவில் மும்பை போலீஸாரால் கைது செய்யப் படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவலர்கள் பணிமாற்றம்

இந்நிலையில் மும்பையின் 94 காவல் நிலையங்களில் சர்ச்சைகளில் சிக்கிய மற்றும் புகாருக்கு ஆளான சுமார் 20,000 காவலர்களை சீராய்வு எனும் பெயரில் இடமாற்றம் செய்ய மாநகர ஆணையர் ராகேஷ் மரியா நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார். இந்த இடமாறுதலில் இருந்து தப்பிக்க சாக்குபோக்கு சொல்பவர்கள் பற்றி தன்னிடம் கூறும்படியும் ஆணையர் தெரிவித்துள்ளார். தர்மராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளியான தகவலை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ரகசிய பெயரில் ‘மெப்பிட்ரோன்’

மன அழுத்தம் உட்பட உளவியல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெப்பிட்ரோனால் தயாரிக்கப்பட்ட மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பது வழக்கம். இது உடலில் செலுத்தப்பட்டவுடன் நரம்புகளில் கிளர்ச்சியை உருவாக்கி உற்சாகமூட்டும் தன்மை கொண்டது. மேலும் 4 இரவுகள் வரை தூங்காமல் உற்சாகமாக இருக்கச் செய்யும் என்றும் கூறப்படு கிறது.

மும்பை, புனே ஆகிய நகரங்களில் ‘மியாவ் மியாவ்’ என்ற பெயரில் இரவு நடனவிடுதி மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் சிலவற்றில் மெப்பிட்ரோன் பயன்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், மகாராஷ்டிர அரசுக்கு சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது பெரும் தலைவலியாக இருந்திருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு, மகாராஷ்டிரத்தில் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா அரசு, மத்திய அரசிடம் அனுமதி பெற்று கடந்த பிப்ரவரி 5-ம் தேதி முதல் மெப்பிட்ரோனை தடை செய்யப்பட்ட போதைப் பொருளாக அறிவித்துள்ளது. நாட்டில் முதல் மாநிலமாக மகாராஷ்டிரத்தில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அம்மாநிலத்தில் தடை செய்யப்பட்டதில் இருந்து இதுவரை சுமார் 700 கிலோ மெப்பிட்ரோன் பறிமுதல் செய்யப்பட்டு, 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கிலோ மெப்பிட்ரோன் விலை ரூ. 30,000 வரை கள்ளச் சந்தையில் விற்கப்படுகிறது. சென்னையில் ‘எம்.டி’ எனும் பெயரில் மெப்பிட்ரோன் அழைக்கப்படுவதாகவும், இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது தமிழகத்தில் இதுவரை தடை செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x