Published : 23 Mar 2015 09:57 PM
Last Updated : 23 Mar 2015 09:57 PM
எல்லையில் தொடரும் தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்தினால்தான் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மற்றும் சம்பா மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மோடி ட்விட்டரில் “பாகிஸ்தான் தேசிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு கடிதம் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளேன்” என கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் ட்விட்டரில் கூறும்போது, “பாகிஸ்தானுடனான அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காண இந்தியா விரும்புகிறது. ஆனால், அதற்கு முன்னதாக, இரு நாட்டு எல்லையில் தொடர்ந்து நடைபெறும் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களை பாகிஸ்தான் தடுத்து நிறுத்தி அமைதியான சூழலை உருவாக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நரேந்திர மோடி பிரதமரானதும் பாகிஸ்தானுடன் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்தார். ஆனால், இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக பிரிவினைவாத இயக்கங்களின் தலைவர்களுடன் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து மத்திய அரசு பேச்சுவார்த்தையை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT