Published : 26 Mar 2015 09:01 AM
Last Updated : 26 Mar 2015 09:01 AM
பாகிஸ்தான் தேசிய நாளை முன்னிட்டு காஷ்மீரில் கடந்த திங்கள்கிழமை அந்நாட்டு கொடியை ஏற்றிய பிரிவினைவாத பெண் தலைவர் மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.
துக்தரன்-இ-மில்லத் (தேசத்தின் மகள்கள்) என்ற அமைப்பின் தலைவரான ஆஸியா அன்ட்ரபி கடந்த திங்கள்கிழமை பாகிஸ்தான் கொடியேற்றி, அந்நாட்டு தேசிய கீதத்தை பாடியதாக ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து சர்ச்சை உருவானது.
இந்நிலையில் ஸ்ரீநகரில் போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “அன்ட்ரபி மீது தேசவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் 13-வது பிரிவின் கீழ் நவாட்டா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது” என்றார்.
அன்ட்ரபி கைது செய்யப் படுவாரா என நிருபர்கள் கேட்டதற்கு, “இந்த வழக்கில் சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் அந்த அதிகாரி.
கைது செய்ய கோரிக்கை
இதனிடையே ஜம்மு காஷ்மீர் பாஜக எம்எல்ஏ ரவீந்தர் ரெய்னா நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “ஆஸியா அன்ட்ரபி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். அவரை உடனே கைது செய்யவேண்டும். அவரை ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியேற்றி, டெல்லி திஹார் சிறையில் அடைக்கவேண்டும்” என்றார்.
தேசிய மாநாடு கட்சித் தலைவர் முகம்மது அக்பர் லோனே கூறும்போது, “காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியேற்றப்படுவது இது முதல் முறையல்ல. அன்ட்ரபி சட்டத்தை மீறியுள்ளாரா என நாம் பார்ப்பது அவசியம். இது எந்த அளவுக்கு தேசவிரோதம் என போலீஸார் விசாரிக்க வேண்டும். காஷ்மீரில் பாஜக மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்பிரச்சினைக்கு அக்கட்சி அரசியல்ரீதியில் தீர்வுகாண வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT