Published : 03 Mar 2015 03:29 PM
Last Updated : 03 Mar 2015 03:29 PM
ஆர்.எஸ்.எஸ். என்பது திருமணமாகாதவர்களைக் கொண்ட அமைப்பு, இவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி பாடம் எடுக்கலாமா என்று மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அக்பருதீன் ஓவைஸி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐதராபாத்தில் நேற்று கட்சியின் 57-வது ஆண்டு விழாவையொட்டி பொதுக்கூட்டமொன்றில் பேசிய ஓவைஸி, இவ்வாறு கூறினார்.
அதாவது ஆர்.எஸ்.எஸ். திருமணமாகாதவர்களைக் கொண்டது. அதிக குழந்தைகளைப் பெற்று கொள்ள வேண்டும் என்று இவர்கள் கூறுவது பொருந்தாது. ஏனெனில் இவர்களே திருமணம் செய்து கொள்ளாதவர்கள். குழந்தை பெற்று கொள்வது பற்றி அறிவுரை வழங்க இவர்களுக்கு இதனால் உரிமை கிடையாது. என்றார்:
”ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். இது திருமணமாகாத தனிநபர்களை கொண்ட அமைப்பு. இவர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள், பொறுப்பை எடுத்துக் கொள்ள தயாராக இல்லாதவர்கள், வாழ்க்கையில் பிரச்சினைகளைச் சந்திக்க திராணியற்றவர்கள். மனைவி, குழந்தைகள் என்று அவர்கள் பிரச்சினைகளைச் சந்திக்க தயாராக இல்லாதவர்கள், ஆனால் 4 குழந்தைகளை ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஊருக்கு உபதேசம் செய்வர்.
சரி அப்படியே 4 குழந்தைகளைப் பெற்றுக்கொள்கின்றனர். அல்லது 12, 14 என்று பெற்றுக் கொள்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு கல்வி, வேலை, வீடு மற்றும் பிற வசதிகளை உங்களால் செய்து கொடுக்க முடியுமா? இவர்களால் வேலையோ, வீடோ, கல்வியோ அளிக்க முடியாது, குறைந்தது கழிப்பறை கூட கட்டித் தர முடியாதவர்கள் இவர்கள். ஆனால் 4 குழந்தைகளை பெற்றுக்கொள்ள அறிவுரை வழங்குவர்.
அனைத்து முஸ்லிம் மக்களும் ஒன்றிணைந்து தங்களது உரிமைகளுக்காக போராட வேண்டும். ஒருங்கிணையவில்லையெனில் முஸ்லிம்களின் அடையாளத்துக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எம்.ஐ.எம். கட்சி தலித் மக்களின் மேம்பாட்டுக்காக போராடும்.” என்றார்.
உரையின் போது ஜப்பான் பிரதமருக்கு பகவத் கீதையை அளித்த மோடியின் செயல் குறித்து கூறும் போது, ‘மோடி உண்மையில் மதச்சார்பற்றவர் என்றால் இந்திய அரசியல் சாசனம் பற்றிய நூலை அல்லவா அவர் பரிசளித்திருக்க வேண்டும்?’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT