Published : 19 Mar 2015 08:40 AM
Last Updated : 19 Mar 2015 08:40 AM
நிலம் கையகப்படுத்தும் மசோதவை எதிர்த்து டெல்லியில் இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்றைய போராட்டத்தில் தமிழக விவசாயிகள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இப்போராட்டத்தில் கர்நாடகம், உத்தரப்பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், ஹரியாணா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாயிகளும் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்ற தமிழக விவசாயிகளுக்கு தலைமை வகித்த உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து ‘தி இந்து’விடம் கூறியதாவது:
ஆங்கிலேயர்களால் 1894-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மாற்ற விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து 2013-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு புதிய சட்டம் கொண்டு வந்தது.
அதில் உள்ள குறைகளை எதிர்த்து அப்போது 6 நாட்கள் போராட்டம் நடத்தினோம். இதையடுத்து ஜெய்ராம் ரமேஷ், சரத் பவார் உள்ளிட்ட 8 மத்திய அமைச்சர்கள் எங்களை அழைத்து பேசினர். அதில், நிலத்தை கையகப் படுத்த 80 சதவீத விவசாயிகளின் ஒப்புதல், நிலத்துக்கு சந்தையை விட பத்து மடங்கு விலை, அதிருப்தி ஏற்பட்டால் நீதிமன்றத்தை நாடும் உரிமை, விவசாயிகள் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினோம். இதில், சந்தையைவிட நான்கு மடங்கு விலை மற்றும் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டார்கள்.
தற்போது பிரதமராக மோடி பதவியேற்ற பின், விவசாய நலனை பற்றி நினைக்கவே மறுக்கிறார். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின உரைகளில் அந்நிய முதலீடு, அந்நிய செலவாணி, தொழில் முதலீடு மற்றும் அதன் வளர்ச்சி எனப் பேசினாரே தவிர, விவசாயிகளை பற்றி ஒரு வார்த்தை கூட மோடி பேசவில்லை.
எதிர்ப்புக்குப் பின் மேற்கொள்ளப்பட்டுள்ள எந்த ஒரு திருத்தமும் விவசாயிகளுக்கு சாதகமாக இல்லை. உற்பத்தி செலவுக்கு மேல் ஐம்பது சதவீதம் விலை கொடுக்க வேண்டும் எனக் கூறிய எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்துவது தொடர்பாக, மோடி அரசு இன்று வரை எதுவும் பேசாமல் உள்ளது.
மரபணு மாற்றப்பட்ட விதை தொடர்பாகவும் மோடி அரசின் செயல்பாடு சரியில்லை. டெல்லி யில் எங்கள் போராட்டம் தோல்வி அடைந்தால், மாநிலம், மாவட்டம் மற்றும் கிராமம் வாரியாக போராட்டம் விரிவுபடுத்தப்படும். இது தொடர்பாக அனைத்து மாநில போராட்டக்குழு முடிவு செய்யும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT