Published : 31 Mar 2015 07:35 AM
Last Updated : 31 Mar 2015 07:35 AM
டெல்லியில் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பார் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் விவசாயிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ராகுல் காந்தி பங்கேற்று பேசுவார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் நேற்று தெரிவித்தார்.
முன்னதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கட்சிப் பணி யில் இருந்து தற்காலிக விடுப்பில் செல்வதாக கடந்த பிப்ரவரி 23-ம் தேதி கட்சி சார்பில் அறிவிக்கப் பட்டது. சுமார் 2 வாரத்தில் அவர் கட்சிப் பணிக்கு திரும்புவார் என அப்போது கூறப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் ராகுல் விடுப்பில் சென்றது அப் போது பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தியது. கட்சியின் தொடர் தோல்வியால் ராகுல் விரக்தியடைந்துவிட்டார் என்றும், கட்சியில் தனது முடிவு களை செயல்படுத்த முடியாததால் வெறுப்படைந்துவிட்டார் என்றும் கூறப்பட்டது.
எனினும் இருவாரங்களுக்குப் பிறகும் ராகுல், பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. அவர் எங்கு சென்றுள்ளார் என்ற தகவலும் தெரியவரவில்லை. இந்நிலையில் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் அவரை காணவில்லை என்று கூறி ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. ராகுல் எங்கிருக்கிறார்? என்ன செய்கிறார்? என்பது குறித்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில் இந்த பரபரப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஏப்ரல் 19-ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சி நடத்தும் விவசாயிகள் பொதுக் கூட்டத்தில் ராகுல் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT