Published : 17 Mar 2015 10:36 AM
Last Updated : 17 Mar 2015 10:36 AM

மேற்குவங்கத்தில் கன்னியாஸ்திரி பலாத்காரம்: வெளி மாநிலங்களுக்கு குற்றவாளிகள் தப்பி ஓட்டமா? - போலீஸ் கண்காணிப்பாளர் பரபரப்பு தகவல்

‘‘கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகிறோம்’’ என்று போலீஸ் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டம் ரனாகட் பகுதியில் ஜீசஸ் மேரி கான்வென்ட் இயங்கி வருகிறது. இங்கு பள்ளி மற்றும் கன்னியாஸ்திரிகள் தங்கும் இல்லம் உள்ளது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவு பள்ளிக்குள் புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியது. ரூ.12 லட்சத்தை கொள்ளை அடித்தது. அதைத் தடுக்க வந்த 72 வயது கன்னியாஸ்திரியை அந்த கொள்ளை கும்பல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியது. இதுகுறித்து சிஐடி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக 10 பேரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். எனினும் முக்கிய குற்றவாளிகள் இன்னும் சிக்கவில்லை. இது குறித்து நாடியா மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பி.பி.அர்னாப் கோஷ் நேற்று கூறியதாவது:

கான்வென்ட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் குற்றவாளிகள் 4 பேரின் உருவங்கள் பதிவாகி உள்ளன. இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 10 பேரும், அந்த 4 உருவங்களுடன் ஒத்துப் போகவில்லை. கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், கேமராவில் பதிவான 4 பேரை மாவட்டம் முழுவதும் தீவிரமாகத் தேடி வருகிறோம். அவர்களைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அண்டை மாநிலங்களுக்குக் குற்றவாளிகள் தப்பிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, பக்கத்து மாநிலங்களிலும் சிஐடி போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட உள்ளனர்.

இவ்வாறு அர்னாப் கோஷ் கூறினார்.

இதற்கிடையில், மாவட்ட ஆட்சியர் பி.பி.சலீம், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியை ரனாகட் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், தற்போது சிஐஎஸ்சிஇ பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. கான்வென்ட் பள்ளியில் வழக்கம் போல் தேர்வுகள் அமைதியான முறையில் நடந்து வருகின்றன என்று ஆட்சியர் தெரிவித்தார். டிஜிபி ஜி.எம்.பி.ரெட்டி, டிஐஜி கலோல் கோனய் (முர்ஷிதாபாத் மண்டலம்) உட்பட அதிகாரிகள் நேற்று பள்ளிக்குச் சென்று ஆய்வு நடத்தினர்.கன்னியாஸ்திரிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ரோமன் கத்தோலிக் ஆர்ச் டையோசிஸ் அமைப்பினர் கொல்கத்தாவில் மாபெரும் பேரணி நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x