Last Updated : 14 Mar, 2015 03:38 PM

 

Published : 14 Mar 2015 03:38 PM
Last Updated : 14 Mar 2015 03:38 PM

வேவு பார்க்கப்பட்டாரா ராகுல் காந்தி?- டெல்லி போலீஸ் தீவிர விசாரணை; காங்கிரஸ் கடும் கண்டனம்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் அங்க அடையாளங்கள் குறித்து தகவல் திரட்டப்பட்டது தொடர்பாக டெல்லி போலீஸார் இன்று விசாரணை மேற்கொண்டனர்.

டெல்லி துக்ளக் நகரில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டுக்குச் சென்ற போலீஸ் கூடுதல் கமிஷனர் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இரண்டு நாட்களுக்கு முன்னதாக ராகுல் அலுவலகத்தில் அவரைப் பற்றி விசாரித்ததாகக் கூறப்படும் போலீஸ்காரரின் புகைப்படங்களையும் பரிசோதனை செய்தனர்.

விசாரணை தொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸியிடம் விரைவில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறும்போது, "கடந்த 2 தினங்களுக்கு முன்னர் ராகுல் காந்தியின் அலுவலகத்துக்கு வந்த போலீஸ்காரர் ஒருவர் ராகுல் காந்தியின் கண் நிறம், தலைமுடி நிறம் போன்ற அங்க அடையாளங்களை விசாரித்தார். அந்த நபரின் கேள்விகள் சற்று வினோதமாக இருந்ததால் அவரது புகைப்படத்தை கட்சி அலுவலகத்தில் இருந்தவர்கள் எடுத்துவைத்துள்ளனர். இதுமாதிரியான மறைமுக கண்காணிப்பு, பின் தொடரும் சம்பவங்கள் குஜராத் மாதிரியாக இருக்கலாமே தவிர இந்திய மாதிரியாக இருக்க முடியாது. (குஜராத்தில், அப்போதைய மோடி அரசால் இளம் பெண் ஒருவர் வேவு பார்க்கப்பட்டது தொடர்பாக நிலவிய சர்ச்சையை நேரடியாக குறிப்பிடாமல் சிங்வி இவ்வாறு கூறினார்)"

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ கூறும்போது, "ராகுல் வேவு பார்க்கப்பட்ட சம்பவம் தனிநபர் சுதந்தரத்தை அத்துமீறும் செயல். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. யாருடைய உந்துதலின் பேரில் இந்த வேவு பார்க்கும் செயல் நடந்துள்ளது என்பதை டெல்லி போலீஸ் மூத்த அதிகாரிகள் விளக்க வேண்டும். ராகுல் ஒரு எம்.பி. அவரைப் பற்றிய அனைத்து தகவல்களும் நாடாளுமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திலேயே கிடைக்கும் அப்படி இருக்கும்போது புதிதாக என்ன ரகசியம் தெரிந்து கொள்ள போலீஸ் வேவு பார்த்துள்ளது" என கேள்வி எழுப்பினார்.

உள்துறை விளக்க வேண்டும்: காங்கிரஸ்

ராகுல் காந்தி வேவு பார்க்கப்பட்ட விவகாரத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மோடி அரசு ராகுலை அரசியல் ரீதியாக வேவு பார்த்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x