Published : 02 Mar 2015 02:23 PM
Last Updated : 02 Mar 2015 02:23 PM
ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடைபெற்றதற்கு பாகிஸ்தானும், பிரிவினைவாத தலைவர்களும் ஒத்துழைப்பு அளித்ததே காரணம் என அம்மாநிலத்தின் புதிய முதல்வர் முப்தி முகமது சையத் கூறிய கருத்து மக்களவையில் கடும் சர்ச்சையை கிளப்பியது.
காஷ்மீர் முதல்வர் சர்ச்சைக் கருத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.
குறிப்பாக காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் மக்களவையின் பூஜ்ய நேரத்தின்போது இவ்விவகாரத்தை எழுப்பினார்.
எதிர்க்கட்சிகள் அமளியை அடுத்து மக்களவையில் விளக்கமளித்த உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "ஜம்மு-காஷ்மீர் தேர்தல் சுமுகமாக நடைபெற்றதற்கு பாகிஸ்தானையும், பிரிவினைவாத தலைவர்களையும் பாராட்டிப் பேசிய ஜம்மு முதல்வர் முப்தி முகமது சையத் நிலைப்பட்டில் இருந்து மத்திய அரசும், பாஜகவும் முற்றிலுமாக விலகி நிற்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியுடன் தகுந்த ஆலோசனை மேற்கொண்டதற்கு இணங்கவே இந்த அறிவிப்பை அவையில் நான் தெரிவிக்கிறேன்.
ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையம், ராணுவம், துணை ராணுவம் மற்றும் அம்மாநில மக்களே காரணம்.
முப்தி முகமது சையத் கருத்தை மத்திய அரசோ, பாஜகவோ எவ்விதத்திலும் ஆதரிக்கவில்லை. இது தொடர்பாக முப்தி முகமது, பிரதமரிடம் எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை" என்றார்.
ஆனால் ராஜ்நாத் சிங் விளக்கத்தை ஏற்க எதிர்க்கட்சியினர் தயாராக இல்லை. காங்கிரஸ் உறுப்பினர் வேணுகோபால் கூறும்போது, "இது மிகவும் சிக்கலான விவகாரம். காஷ்மீர் முதல்வர் பேச்சைக் கண்டித்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, "ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சையத் பாகிஸ்தான் மற்றும் பிரிவினைவாதிகளை பாராட்டியுள்ளதோடு மட்டுமல்லாமல் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்பாக பிரதமரிடம் பேசியிருப்பதாகவும் கூறியுள்ளார். எனவே இவ்விவகாரத்தில் பிரதமரே சிறப்பாக விளக்கமளிக்க முடியும்" என்றார்.
ராஜ்நாத் சிங் விளக்கத்தை ஏற்க மறுத்து அவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்புச் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT