Published : 17 Mar 2015 08:39 AM
Last Updated : 17 Mar 2015 08:39 AM
நல்லம்ம நாயுடு தலைமையிலான தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் 7.12.1996 முதல் 12.12.1996 வரை 31&36 கதவு எண்கள் கொண்ட ஜெயலலிதா வின் போயஸ்கார்டன் வீட்டில் சோதனை நடத்தினர். கைப்பற்றப் பட்ட நகைகளையும் அலங்கார பொருட்களையும் சுங்கத்துறை அதிகாரி வாசுதேவன் `மெட்லர் எலெக்ட்ரானிக்' என்ற பிரத்யேக தராசு மூலம் மதிப்பிட்டார். இதை ஜெயலலிதாவின் ஆலோசகர்கள் பாஸ்கரன், விஜயன், வழக்கறி ஞர்கள் சேகர், சந்திரசேகர், ஐ.ஏ.எஸ் அதிகாரி கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நேரடியாக கண்காணித்தனர். அதில் 31,போயஸ்கார்டன் வீட்டில் கைப் பற்றப்பட்ட 23,113 கிராம் தங்கத்தின் அன்றைய விலை 91 லட்சத்து 57 ஆயிரத்து 253 ரூபாய். தங்கத்தில் பதிக்கப்பட்டிருந்த வைரத்தின் அன்றைய விலை 2 கோடியே 43 லட்சத்து 92 ஆயிரத்து 790 ரூபாய்.
இதே போல 36, போயஸ் கார்டன் வீட்டில் நடத்திய சோதனை யில் 42 நகைப் பெட்டிகளில் 4,475 கிராம் தங்கம் இருந்தது. அதன் அன்றைய மதிப்பு ரூ.17 லட்சத்து 37 ஆயிரத்து 266 என்று பதிவு செய்யப்பட்டது. அதில் பதிக்கப்பட்ட வைரத்தின் மதிப்பு ரூ.47 லட்சத்து 61 ஆயிரத்து 816. மேலும், 1,116 கிலோ வெள்ளிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதன் அன்றைய மதிப்பு ரூ.48 லட்சத்து 80 ஆயிரம் என குறிக்கப்பட்டது. ஆக மொத்தம் ஜெயலலிதாவின் வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க, வைர, வெள்ளி நகைகளின் மொத்த மதிப்பு ரூ.5 கோடியே 47 லட்சத்து 91 ஆயிரத்து 252 என மதிப்பிடப்பட்டது.
1,116 கிலோ வெள்ளிப் பொருட் களை தனது ஆலோசகர் பாஸ்கரனிடம் வழங்குமாறு ஜெயலலிதா கோரியதால், அவரிடம் வழங்கப்பட்டது. மற்ற தங்கம், வைர நகைகளை நந்தனம் அரசு கருவூலத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் மகஜர் சொல்கிறது. இதனை அரசு தரப்பு சாட்சிகள் வாசுதேவன், ஸ்ரீஹரி, சாந்தகுமார் ஆகியோர் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தினர்.
1996-ம் ஆண்டு பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்ட 1,116 கிலோ வெள்ளிப் பொருட்களை பெங்களூரு நீதிமன்றத்துக்கு கொண்டுவருவதில் நீதிபதி குன்ஹா பிடிவாதம் காட்டினார். அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் அக்கறை காட்டாததால் அது நிறைவேறாமல் போனது. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் பாஸ்கரனும் இறந்துவிட்டதால், தற்போது அந்த 1,116 கிலோ வெள்ளி யாரிடம் இருக்கிறது என தெரியவில்லை.
ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கள், “1964-ம் ஆண்டு முதல் ஜெயலலிதா தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். ஜெயலலிதா மட்டுமல்ல, அவரது தாயார் சந்தியாவும் திரைப்படங்களில் நடித்து சம்பாதித்துள்ளார். அதிமுகவில் இணைந்த பிறகு எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வெள்ளி வாள், வெள்ளி கிரீடம், வெள்ளி செங்கோல் மற்றும் சில தங்க, வைர நகைகளை பரிசாக வழங்கினார்.
1984-90 காலகட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினராக வும், சட்டமன்ற உறுப்பினராகவும் ஜெயலலிதா இருந்துள்ளார். அப்போது அதிமுக தொண்டர்கள் அவருக்கு அன்பளிப்பாக 3,365 கிராம் தங்கம் வழங்கினர். இந்த காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கு வந்த அன்பளிப்பு நகைகளையும் சேர்த்து அவரிடம் 26,902 கிராம் தங்கம் இருந்தது. இதற்காக ஜெயலலிதா 1964-ம் ஆண்டில் இருந்து 1996 வரை அந்தந்த ஆண்டுகளில் முறையாக சொத்துவரியும், வருமான வரியும் செலுத்தியுள்ளார்.1992-ம் ஆண்டு ஜெயலலிதாவிடம் இருந்த தங்க வைர நகைகளின் மதிப்பு ரூ.1 கோடியே 60 லட்சம் என்பதை வருமான வரித்துறை தீர்ப்பாயமும் உறுதி செய்துள்ளது.
இதே போல `கீர்த்திலால் காளி தாஸ் & கம்பெனி'யைச் சேர்ந்த சுப்புராஜ் (அரசு தரப்பு சாட்சி 155), சாந்தகுமார் அளித்த வாக்கு மூலத்தில்,1991-க்கு முன்பு சசிகலாவிடம் 1,902 கிராம் தங்க, வைர நகைகளும் இருந்ததை உறுதிபடுத்தியுள்ளார். தனது நகைகளுக்காக அந்தந்த ஆண்டு களில் வருமான வரியும் சொத்துவரியும் செலுத்தியுள்ளார். வழக்கு காலத்துக்கு முன்பே வாங்கப்பட்ட தங்க, வைர, வெள்ளி உள்ளிட்ட நகைகளை எல்லாம் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வாங்கியதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது. ஆனால் அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கூறும் தங்க,வைர நகையின் அளவுக்கும், ஜெயலலிதா தரப்பு கூறும் நகைகளின் அளவுக்கும் இடையே 656 கிராம் வித்தியாசம் இருக்கிறது. இந்த தவறை தங்கத்தை மதிப்பிடுவதில் அனு பவம் இல்லாத சுங்கத்துறை அதிகாரி வாசுதேவன் செய்துள் ளார். அதே போல ஜெயலலிதாவின் வீட்டில் கைப்பற்றிய பெரும்பாலான பூர்வீக பழைய நகைகளை எல்லாம் புதிய நகைகளாக மதிப் பிட்டுள்ளார். மேலும் நகைகள் வாங்கப்பட்ட தேதியைக் கொண்டு மதிப்பிடாமல், கைப்பற்றப்பட்ட1996-ம் ஆண்டு தங்க, வைர விலை நிலவரப்படி நகைகளை மதிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் சொத்துக் களை மிகைப்படுத்தி காட்ட வேண் டும் என்பதற்காகவே, நகைகளில் பதிக்கப்பட்ட சாதாரண ஃபேன்ஸி கற்களை எல்லாம் விலையுயர்ந்த வையாக மதிப்பிட்டுள்ளனர். எனவே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் மதிப்பீட்டை நீதிமன்றம் ஏற்கக்கூடாது''என ஜெயலலிதா தரப்பில் வாதிட்டனர்.
முன்பணம் வாங்கிய நடராஜன்
இதற்கு நீதிபதி குன்ஹா, “ஜெயலலிதாவின் நகைகளை மதிப்பிட்ட வாசுதேவன் தங்கத்தை மதிப்பீடு செய்வதில் 10 ஆண்டுகளுக்கும் குறைவான அனுபவம் மிக்கவர். அதனால் அவரது மதிப்பீட்டில் தவறுகள் இருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தனது நகைகள் எல்லாம் பரிசுப் பொருளாகவும், வழக்கு காலத்துக்கு முன்பாகவும் வாங்கப்பட்டதாகக் கூறுவதை ஏற்க முடியாது.1991-ம் ஆண்டுக்குப் பிறகு வாங்கப்பட்ட நகைகளுக்கு பழைய தேதியிட்டு வருமான வரி கட்டியுள்ளனர். சொத்துவரி, வருமான வரி கட்டியதால் மட்டுமே அவை நேர்மையான வழியில் வந்தவை என பொருள் கொள்ளமுடியுமா?
மேலும் அரசு தரப்பு சாட்சிகள் உம்மிடி பங்காரு செட்டி நகைக்கடை ஹரி, கீர்த்திலால் காளிதாஸ் & கம்பெனி' கடையை சேர்ந்த சுப்புராஜ், சாந்தகுமார் ஆகியோர் தங்கள் வாக்குமூலத்தில், “1986 முதல் 1991 வரை ஜெயலலிதா, சசிகலாவுக்கு நகைகளை விற்றோம். மேலும் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்த 62 தங்க, வைர நகைகளை மதிப்பிட்டு,அதன் அன்றைய விலை 1 கோடியே 9 லட்சத்து 8 ஆயிரத்து 206 ரூபாய் என சான்றிதழ் கொடுத்தோம். இதே போல 1990-91-ம் ஆண்டு சசிகலாவின் தங்க வைர நகைகளை மதிப்பிட்டு ரூ.12 லட்சத்து 95 ஆயிரத்து 704 எனவும்,5 கிலோ வெள்ளிப் பொருட்களின் மதிப்பு ரூ.27 ஆயிரத்து 468 எனவும் சான்றிதழ் அளித்தோம்'' என கூறியுள்ளனர்.
1991-92-ம் ஆண்டு சசிகலா தாக்கல் செய்த சொத்துக் கணக்கில் தனது தங்க, வைர நகைகளின் மதிப்பு 1 கோடியே 10 லட்சத்து 13 ஆயிரத்து 946 ரூபாய் என்றும், வெள்ளிப் பொருள்களின் மதிப்பு 70 லட்சத்து 61 ஆயிரத்து 400 ரூபாய் என்றும் தெரிவித்துள்ளார். ஓராண்டுக்குள் சசிகலாவின் நகைகளின் மதிப்பு ரூ.1 கோடியே 67 லட்சத்து 52 ஆயிரத்து 174 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வளவு நகைகள் சசிகலாவுக்கு எப்படி வந்தது? எங்கு வாங்கினார்? எந்தத் தேதியில் வாங்கினார்? என்பதற்கு ஆதாரங்களை தாக்கல் செய்ய வில்லை. சசிகலாவின் கணவர் நடராஜன் மூலமாக நகைகள் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை. 1991-ம் ஆண்டில் அரசு ஊழியராக இருந்த நடராஜன் ஒரு ஸ்கூட்டர் வாங்குவதற்கே அரசிடம் ரூ.3,000 முன்பணமாக பெற்றுள்ளார். 1991-க்கு முன்பு ஜெயலலிதா மற்றும் சசிகலாவிடம் 7,040 கிராம் தங்கம் மட்டுமே இருந்துள்ளது என தெரிய வருகிறது.
எனவே போயஸ்கார்டன் வீட்டில் கைப்பற்றப்பட்ட 27588 கிராம் தங்கத்தில்,20548 கிராம் தங்கம் ஜெயலலிதா முதல்வராக இருந்த 1991-96 காலக்கட்டத்தில் வாங்கப்பட்டது.1992-ம் ஆண்டின் தங்க விலை நிலவரப்படி அதன் மதிப்பு ரூ.88 லட்சத்து 97ஆயிரத்து 324. அதில் பதிக்கப்பட்டிருந்த வைரங்களின் மதிப்பு ரூ.1 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 820 ஆகும். ஆக மொத்தம் ஜெயலலிதா தரப்பின் தங்க,வைர நகைகளின் மதிப்பு ரூ.2 கோடியே 51 லட்சத்து 59 ஆயிரத்து 144'' என தனது தீர்ப்பில் குன்ஹா விவரித்துள்ளார்.
இவ்வளவு பரிசா?
மேல்முறையீட்டில் தங்க,வைர நகைகள் மீதான விசாரணையின் போது நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, “ஜெயலலிதாவை சிறையில் அடைத்துவிட்டு, அவர் இல்லாத நிலையில் அவரது வீட்டில் சோதனை நடத்தியது ஏன்? எதற்காக அவ்வாறு சோதனை நடத்தப்பட்டது? யாருடைய உத்தரவின் அடிப்படையில் இப்படி சோதனை நடத்தப்பட்டது?'' என கேள்வி எழுப்பினார். அதற்கு பவானிசிங் மவுனமாக இருந்ததால் திமுக வழக்கறிஞர் சரவணன், “ஜெயலலிதாவின் ஒப்புதல் கடிதத்தின் பேரிலே சோதனை நடத்தப்பட்டது''என்றார்.
அதற்கு நீதிபதி, “போலீஸாரின் கட்டுப்பாட்டில் இருப்பவர் அளிக்கும் ஒப்புதல் கடிதத்தை ஏற்பதில் நிறைய சிக்கல் இருப்பதாக உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் குறிப்பிட்டுள்ளது தெரியுமா?'' எனக் கேட்டார். ஜெயலலிதாவின் தங்க, வைர, வெள்ளி நகைகளின் பட்டியலை நோட்டம் விட்ட நீதிபதி, “ஜெயலலிதாவுக்கு பரிசாக இவ்வளவு நகைகள் வந்ததா?''என கேட்டார்.
அதற்கு வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ், “தமிழர்கள் மிகவும் வித்தியாசமான குணாம்சம் உடையவர்கள். மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, தங்களின் தலைவர் களுக்காக எதையும் செய்வார்கள். எம்ஜிஆரில் ஆரம்பித்து தற்போது ரஜினிகாந்த் வரை இதுதொடர் வதை பார்க்கலாம்.
இவ்வழக்கில் ஜெயலலிதா சிறையில் இருந்தபோது 300-க்கும் மேற்பட்டவர்கள் உணர்ச்சிவசப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்கள். இந்நிலையில், தொண்டர்கள் அன்புப் பரிசாக வழங்கியதை எல்லாம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஜெயலலிதாவின் சொத்தாக சேர்த்துள்ளது''என்றார்.
சற்று நேரம் மவுனமாக இருந்த நீதிபதி, “அண்ணா துரை, எம்ஜிஆர், கருணாநிதி ஆகிய திராவிட தலைவர்களைப் பற்றி படித்திருக்கிறேன். எம்ஜிஆர் அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தவாறே தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் முதல்வராக இருந்தார் அல்லவா?''என மலரும் நினைவுகளை சற்று அசைப்போட்டார்.
1997-ம் ஆண்டு சென்னை சிங்காரவேலர் மாளிகையில் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பு நகைகள் பற்றி அளித்த வாக்குமூலத்தையும் தற்போது வைக்கப்படும் வாதத்தையும் நீதிபதி குமாரசாமி ஒப்பிட்டுக் குறித்துக் கொண்டதாகவும் தெரிகிறது.
-தீர்ப்பு நெருங்குகிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT