Published : 07 Mar 2015 09:35 PM
Last Updated : 07 Mar 2015 09:35 PM
கிரிமினல் குற்றச்சாட்டுகள் இல்லாத அரசியல் கைதிகளை விடுதலை செய்வது என்ற ஜம்மு காஷ்மீர் அரசின் கொள்கையின்படி, மஸ்ரத் ஆலம் என்ற பிரிவினைவாத தலைவர் விடுதலை செய்யப்பட்டார்.
4 ஆண்டுகள் இவர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2010ஆம் ஆண்டு நடைபெற்ற காஷ்மீர் கலவரத்தின் போது இளைஞர்களை இவர் பாதுகாப்புப் படையினருக்கு எதிராகத் தூண்டியதாக கைது செய்யப்பட்டார்.
மேலும், தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைத்து பிரிவினைவாத தலைவர்களும் விடுதலை செய்யப்படுவர் என்று முதல்வர் முப்தி முகமது சயீத் தெரிவித்துள்ளார்.
42 வயதான மஸ்ரத் ஆலம், ஹுரியத் மாநாடு அமைப்பிலிருந்து உருவான ‘ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் லீக்’ கட்சியைச் சேர்ந்தவர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் 2008 மற்றும் 2010-ம் ஆண்டில் கல்வீசித் தாக்கும் போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர். தற்போது இவர் பாரமுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரை விடுதலை செய்ய மாநில அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான நடைமுறைகள் பூர்த்தியானவுடன் இவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று பாரமுல்லா நகர காவல்துறை உயரதிகாரி ஒருவர் நேற்று கூறினார்.
மாநில காவல்துறை இயக்குநர் (டிஜிபி) ராஜேந்திர குமார் இதனை உறுதிப்படுத்தினார்.
முன்னதாக டிஜிபி ராஜேந்திரா குமார் கூறும்போது, “கிரிமினல் குற்றச்சாட்டு இல்லாத அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு முதல்வர் முப்தி முகமது சயீது பிறப்பித்த உத்தரவை ஏற்று செயல்படுத்துவோம்” என்றார்.
என்றாலும், 2008 மற்றும் 2010-ம் ஆண்டு கல்லெறி போராட்டங்களில் தொடர்புடைய மஸ்ரத் ஆலம், காசிம் ஃபக்டூ உள்ளிட்ட பிரிவினைவாதிகளை விடுவிக்கும் திட்டம் உள்ளதா?” என்ற கேள்விக்கு, “இத்தருணத்தில் இதுபற்றி விரிவாக பேசமுடியாது” என்று ராஜேந்திர குமார் கூறினார்.
ஜம்மு காஷ்மீர் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள முப்தி முகமது சயீது, கடந்த புதன்கிழமை டிஜிபி ராஜேந்திர குமாரை அழைத்துப் பேசினார். அப்போது, மாநிலத்தில் கிரிமினல் குற்றச்சாட்டுகள் இல்லாத அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் சரணடைந்த மற்றும் விடுதலையான தீவிரவாதிகளின் மறுவாழ்வுக்கு முழுமையான திட்டம் வகுக்கவும் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT