Published : 17 Mar 2015 10:24 AM
Last Updated : 17 Mar 2015 10:24 AM
62 சுங்கச் சாவடிகள் மூடல்
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் நேற்று கூறியதாவது:
தேசிய நெடுச்சாலைகளில் 62 சுங்கச்சாவடிகள் மூடப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து ரூ.100 கோடிக்கு குறைவான மதிப்பில் கட்டப்பட்ட சாலைகளில் சுங்கச் சாவடிகளை அகற்றுவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என்றார்.
112 ஹெக்டேர் ரயில்வே நிலம் மீட்பு
மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு மக்களவையில் கூறியதாவது:
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரயில்வே நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அந்த நிலங்களை மீட்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் 112.67 ஹெக்டேர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்றார்.
கடத்தப்பட்ட சாமி சிலைகள் மீட்கப்படும்
மத்திய கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மா மக்களவையில் கூறியதாவது:
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகளை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விஷ்ணு, புத்தர், துர்கா என 11 சாமி சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளதாக அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நிலத்தடி நீர் மேம்பாட்டுக்காக 4898 வரைபடம்
மத்திய குடிநீர் துறை அமைச்சர் ராம்கிர்பாள் யாதவ் மாநிலங்களவையில் கூறியதாவது:
நாடு முழுவதும் நிலத்தடி நீர் மேம்பாட்டுக்காக 4898 ஆய்வு வரைபட திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
2022-ல் ஒரு லட்சம் மெகாவாட் சூரிய மின்சக்தி
மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மாநிலங்களவையில் கூறியதாவது:
நாடு முழுவதும் சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது 20 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. வரும் 2022-ம் ஆண்டில் இதனை ஒரு லட்சம் மெகாவாட்டாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT