Last Updated : 16 Mar, 2015 11:37 AM

 

Published : 16 Mar 2015 11:37 AM
Last Updated : 16 Mar 2015 11:37 AM

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்கள் ஜாமீன் மனு விசாரணை ஆக.3-க்கு ஒத்திவைப்பு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோருக்கு ஜாமீன் தர எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஜாமீன் மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 3-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2-ம் (மார்ச் 2) தேதியன்று இவ்வழக்கு தொடர்பாக மாறன் சகோதர்கள், சன் டைரக்ட் நிறுவனர் சாமிநாதன் உள்ளிட்டோர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே வேளையில்,மலேசிய தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன் மற்றும் அந்நிறுவனத்தின் சிஇஓ ரால்ப் மார்செல் ஆகியோர் ஆஜராகவில்லை.

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகிய மாறன் சகோதர்கள், முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

மாறன் சகோதரர்கள் மனு:

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கை விசாரிக்க மட்டுமே சிபிஐ நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏர்செல் - மேக்சிஸ் வழக்கை விசாரிக்க சிபிஐ நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. எனவே, சிபிஐ நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும். தங்களுக்கு முன் ஜாமீன் அளிக்க வேண்டும்" என மாறன் சகோதரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அப்போது, முன் ஜாமீன் மனு மீது சிபிஐ வரும் 16-ல் (இன்று) விளக்கமளிக்க வேண்டும் என உத்தவிட்டதோடு, முன் ஜாமீன் மனு மீதான விசாரணையையும் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சிபிஐ பதில் மனு:

நீதிமன்ற உத்தரவின்படி, இவ்வழக்கில் இன்று (திங்கள்கிழமை) பதில் மனு தாக்கல் செய்த சிபிஐ, மாறன் சகோதரர்களுக்கு ஜாமீன் தர எதிர்ப்பு தெரிவித்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் வழங்கினால் வழக்கின் போக்கு பாதிக்கப்படும் என சி.பி.ஐ. தெரிவித்தது. அப்போது, நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் ஆஜராகியிருந்தனர்.

வழக்கு பின்னணி:

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ஆஜராகும்படி கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி சம்மன் அனுப்பி இருந்தார்.

இவ் வழக்கில் சிபிஐ ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சிபிஐ தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது விசாரணை நடத்த முகாந்திரம் உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இவ்வழக்கில் மாறன் சகோதரர்கள், மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத் தலைவர் அனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

தயாநிதி மாறன் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சி.சிவசங்கரனுக்கு நிர்பந்தம் அளித்து மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் நிறுவன பங்குகளை விற்கச் செய்தார் என்று சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தகக்து.

இந்தச் சூழலில் மாறன் சகோதரர்கள் ஜாமீன் மனு மீது வரும் ஆகஸ்ட் 3-ம் தேதியன்று பதில் மனு தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x