Published : 19 Mar 2015 09:22 AM
Last Updated : 19 Mar 2015 09:22 AM

பெண்கள் பற்றிய சர்ச்சைக் கருத்து: வருத்தம் தெரிவித்தார் சரத்யாதவ்

கறுப்பு நிறப் பெண்களின் நிறபேத மனப்பான்மை தொடர்பாகவும், அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடர்பாகவும் தான் தெரிவித்த கருத்துகளுக்கு நேற்று மாநிலங்களவையில் வருத்தம் தெரிவித்தார் சரத் யாதவ்.

கடந்த வாரம் காப்பீடு மசோதா தொடர்பான விவாத்தின் மீது பேசிய ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், தென் இந்தியாவில் வாழும் பெண்கள் கறுப்பு நிறத்தவர்கள். ஆயினும் அழகானவர்கள். எனினும் ஆண்களுக்கு வெள்ளைத் தோலின்மீது ஏக்கம் உண்டு” என்றார். இதற்கு, பெண்களின் நிறம் குறித்து விமர்சிக்கக் கூடாது என மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார். அதற்கு சரத் யாதவ் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்பிரச்சி னையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அவையில் எழுப்பினார். அவர் பேசும்போது, “சரத் யாதவின் கருத்துகள் அவைக்குறிப்பில் இடம்பெறாத நிலையிலும், ஊடகங்களில் பல்வேறு விதமாக வெளியாகின்றன. இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் விளக்கமளிக்க வேண்டும்” என்றார்.

அப்போது பேசிய சரத் யாதவ், “இதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். நான் தாய்வழிச் சமூகமான கோண்டு பழங்குடியின பின்புலத்திலிருந்து வந்தவன். பெண்களை மதிக்கிறேன். நமது வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகச் சிறந்தவர். ஸ்மிருதி இரானியை மதிக்கிறேன். அவரின் கல்வித் தகுதி குறித்த கேள்வி எழுந்த போது முதலில் ஆதரவுக் குரல் எழுப்பியவன் நான்தான். ஊடகங்களில் இதுவரை வெளியானவையல்ல எனது இலக்கு. அவரை நான் மதிக்கிறேன்” என்றார்.

முன்னதாக கடந்த இரு தினங்களுக்கு முன், தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க மாட்டேன், அது தொடர்பாக விவாதத்துக்குத் தயார் என சரத் யாதவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x