Published : 26 Mar 2015 09:15 AM
Last Updated : 26 Mar 2015 09:15 AM
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தோல்வி எதிரொலியாக பிஹாரில் முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளது பாஜக. இதனை வரும் ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளன்று கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் பாட்னாவில் தொடங்கி வைக்கின்றனர்.
கடந்த ஆண்டு மக்களவை தேர்த லில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக வுக்கு மகாராஷ்டிரா, ஹரியாணா, ஜார்கண்ட், காஷ்மீர் என அடுத்தடுத்து நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் களிலும் வெற்றி கிட்டியது. இதனால் டெல்லி சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றி கிடைக்கும் என பாஜக உறுதியாக நம்பியது. ஆனால் வெற்றி கைநழுவிப் போனது.
இதனால் பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் வரவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்க முடிவு செய்துள்ளது பாஜக.
பிஹாரில் தலித் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் நிலையில் வரும் ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளில், தலைநகர் பாட்னாவில் மாபெரும் பிரச்சாரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் பாஜக நிர்வாகிகள் கூறும்போது, “மக்களவை தேர்தலில் வீசிய மோடி அலை, மற்ற மாநிலங்களின் சட்டப் பேரவை தேர்தல்களிலும் வீசி வெற்றியை அள்ளித்தரும் என நம்பி யிருந்தோம். எனினும், தொடர்ந்து தேர்தல் நடந்த மாநிலங்களில் எதிர் பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
குறிப்பாக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த ஆதரவு எங்களை படுதோல்வி அடையச் செய்து விட்டது. இந்த நிலையில் நிதிஷ்குமாருடன் லாலு பிரசாத் கூட்டணி சேர்ந்துள்ளதால் டெல்லியில் ஏற்பட்ட முடிவு பிஹாரி லும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரம் தொடங்குகிறோம்” என்றனர்.
பிஹாரின் அரசியல் நிலை
இங்கு கடந்த 1990 முதல் தொடர்ந்து 3 தேர்தல்களில் வெற்றி பெற்ற லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், 14 ஆண்டுகள் ஆட்சி செய்தது. இந்நிலையில் 2005-ல் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சியை கைப் பற்றியது. இதே கூட்டணி, 2010-ல் மீண்டும் வெற்றி பெற்றாலும், அடுத்து வந்த மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டதை நிதிஷ்குமார் எதிர்த்தார். இதனால் ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணி உடைந்தது. எனினும் லாலு மற்றும் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் நிதிஷ்குமார் ஆட்சியில் தொடர்ந்தார்.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் தோல்வியால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஜிதன்ராம் மாஞ்சியை அப்பதவியில் அமரச் செய்தார்.
மாஞ்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பதவியில் இருந்து இறக்கிய நிதிஷ், மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார். நிதிஷும், அவரது அரசியல் எதிரியாக இருந்த லாலுவும் தங்கள் கட்சிகளை ஒன்றாக இணைத்து தேர்தலை சந்திக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை சமாளிக்க பாஜக முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளது.
முதல்வராகும் ஆசையில் மாஞ்சி
இதனிடையே பதவி இறக்கப்பட்ட தால் கடும் கோபம் கொண்ட மாஞ்சி, ‘இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா’ என்ற பெயரில் அரசியல் அமைப்பை உருவாக்கியுள்ளார். அதன் சார்பில் பிஹாரில் சுமார் 150 தொகுதிகளில் போட்டியிட்டு தேர்தலில் மும்முனைப் போட்டியை உருவாக்க திட்டமிட்டுள் ளார். தேர்தல் முடிவுகளுக்கு பின் பாஜக அல்லது நிதிஷ் - லாலுவின் ஆதரவுடன் மாஞ்சி மீண்டும் முதல்வ ராக விரும்புவதாகக் கூறப்படுகிறது. தாம் சார்ந்துள்ள தலித் சமூகம் தனக்கு உதவியாக இருக்கும் என்று மாஞ்சி நம்புவதே இதற்கு காரணம்.
கடந்த தேர்தல் முடிவுகள்
பிஹாரில் தலித் 22 %, முஸ்லிம்கள் 19 %, யாதவ் 17%, தாக்கூர் உள்ளிட்ட உயர் சமூகத்தினர் 12 % என்ற அளவில் உள்ளனர். பிஹாரில் மொத்த முள்ள 243 பேரவைத் தொகுதிகளுக்கு கடைசியாக 2010-ல் நடந்த தேர்தலில் அதிக அளவாக நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 115 தொகுதிகள் கிடைத்தன. பாஜக - 91, ராஷ்டிரிய ஜனதா தளம் - 22, காங்கிரஸ் - 4, ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி - 3, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலா 1 என்ற எண்ணிக்கையிலும் பிற கட்சிகளும் சுயேச்சை -6 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT