Last Updated : 25 Mar, 2015 08:04 AM

 

Published : 25 Mar 2015 08:04 AM
Last Updated : 25 Mar 2015 08:04 AM

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி-9: சசிகலா, சுதாகரன், இளவரசி மிரட்டி வாங்கிய சொத்துகள்

சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா வாதாடியபோது, ‘முதல் வராக இருந்த‌ ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தி சசிகலா, சுதாகரன், இளவரசி இன்னும் பல‌ர் செய்த அதிகார துஷ்பிரயோகத்தை சகித்து கொள்ள முடியாது. இவ்வழக்கில் கண்ணீருடன் சாட்சியம் அளித்திருக்கும் அப்பாவி நில உடைமையாளர்களின் வாக்குமூலத்தை வாசிக்கும்போது மனம் வலிக்கிறது, இவையெல்லாம் அவருக்கு தெரியாமல் நடந்தவையா?''என ஆவேசமாகக் கேட்டார். அதை அப்படியே நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் எதிரொலித்தார்.

பிரபல இயக்குநரும் இசையமைப் பாளருமான கங்கை அமரன் (அரசு தரப்பு சாட்சி 40), அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: ‘‘திரைப்பட துறையில் இருப்பதால் கதை எழுதுவதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் 22 ஏக்கர் நிலம் வாங்கினேன். எனது பெயரிலும் மனைவி மணிமேகலையின் பெயரிலும் இருந்த நிலத்தை விற்குமாறு சுதாகரன் என்னை மிரட்டினார். நான் மறுத்ததால், ‘‘முதல்வர் அழைக்கிறார்.போயஸ்கார்டனுக்கு வாருங்கள்' என என்னை அழைத்தார். அப்போது அங்கிருந்த சசிகலா, நிலத்தை விற்குமாறு மிரட்டி என்னை தாக்கினார். இதனால் ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலத்தை அரசு நிர்ணயித்த விலையைவிட மிக குறைவாக ரூ.9.80 லட்சத்துக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன்'' என சாட்சியம் அளித்துள்ளார்.

அரசு தரப்பு சாட்சிகள் திருத்துவ ராஜ், செல்வராஜ் ஆகியோர் கூறியிருப் பதாவது:

“பையனூரில் சசிகலாவின் பெயரில் கட்டப்பட்ட பங்களாவையும் அதனை சுற்றியுள்ள நிலத்தையும் 1996-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பொதுப் பணித்துறை பொறியாளர் சொர்ணம் (அரசு தரப்பு சாட்சி 107) தலைமையிலான குழுவினர் மதிப்பீடு செய்தனர். பையனூர் பங்களாவில் இருந்த 10 அறைகளும் மார்பிள், கிரானைட் கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நகரும் படிக்கட்டுகள், கதவுகள், ஜன்னல்கள் தேக்குமரத்தில் செய்யப்பட்டிருந்தன. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 25 லட்சத்து 90 ஆயிரத்து 261 என மதிப்பீடு செய்தனர்.

இதேபோல இளவர‌சிக்கு சொந்தமாக சிறுதாவூரில் உள்ள‌ பங்களாவையும் நிலத்தையும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் சோதனையிட்டன‌ர். அங்கிருந்த நீச்சல் குளம், 2 வட்டக் கிணறுகள், மீன் வளர்ப்பதற்கான 6 தொட்டிகள், 12 அறைகள், ஊழியர்கள் தங்க 4 அறைகள் இருந்தன. பங்களாவின் தரையில் மார்பிள் பதிக்கப்பட்டிருந்தன. கலைநயத்துடன் கூடிய இந்தோ இத்தாலியன் வொயிட்மார்பிள் சுவர் களில் பதிக்கப்பட்டிருந்தன. மெட்டாலிக், செராமிக் டைல்ஸ் பதிக்க‌ப்பட்ட குளியலறை, ரூபி ரெட் கிரானைட் கற்களால் அழகூட்டப்பட்ட பால்கனி, தேக்குமர கதவு, ஜன்னல்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ. 5 கோடியே 40 லட்சத்து 52 ஆயிரத்து 298 என மதிப்பிடப்பட்டது” என திருத்துவ ராஜும், செல்வராஜும் கூறியுள்ள‌னர்.

கொடநாடு எஸ்டேட்டின் உரிமையாளர் கிரேக் ஜோன்ஸ்(அரசு தரப்பு சாட்சி 89) அளித்த சாட்சியத்தில் கூறியிருப்பதாவது: ‘‘கொடநாட்டில் எனக்கு சொந்தமான 898 தேயிலை தோட்டத்தை ஆடிசன் குழு, சவுத் இந்தியன் ஷிப்பிங் ஆகிய நிறுவனங்கள் ரூ.9.5 கோடிக்கு வாங்க முயற்சித்தன. அப்போது நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தில் வந்த குண்டர்கள், ‘எஸ்டேட்டை ராமசாமி உடையாருக்கு தான் விற்க வேண்டும்' என மிரட்டினர். இதையடுத்து சூலூர் போலீஸ் நிலையத்தில் 25-10-1993 அன்று புகார் கொடுத்தேன். இருப்பினும் சசிகலா குடும்பத்தினர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக ராமசாமி உடையாருக்கு ரூ.7.5 கோடிக்கு விற்றேன். அடுத்த 6 மாதத்திலேயே அவர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு ரூ.7.6 கோடிக்கு விற்றார். இதில் அரசு நிர்ணயித்த விலைகூட கிடைக்காததால் எனக்கு நஷ்டமும் மன உளைச்சலும் ஏற்பட்டது'' என தெரிவித்துள்ளார்.

மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடு

வழக்கு விசாரணையின்போது எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதாவது:

சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான கட்டிடம் மற்றும் நிலத்தை மதிப்பீடு செய்த பொதுப்பணித் துறை பொறியாளர்கள் சொர்ணம், ரவிசங்கர், திருத்துவராஜ், செல்வராஜ் உள்ளிட்டோர் அப்போதைய திமுக அரசால் நியமிக்கப் பட்டவர்கள். எனவே தாங்கள் பணியாற் றும் அரசுக்கு சாதகமாக செயல்பட வேண் டும் என்பதற்காக கட்டிடத்தின் மதிப்பை மிகைப்படுத்தி மதிப்பீடு செய்துள்ளனர்.

1991-96 காலகட்டத்தில் சசிகலா, சுதாகரன், இளவரசி வாங்கிய அனைத்து சொத்துகளுக்கும் காசோலைகள் மட்டுமே வழங்க‌ப்பட்டன. தமிழக‌ லஞ்ச ஒழிப்புத் துறையினரின் தூண்டுதலால் மூவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு எந்த ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க‌வில்லை. வழக்கில் குற்றப் பத்திரிகை தயாரிப்பதற்கு முன் குற்றம் சுமத்தப்படுபவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவரின் விளக்கத்தை பெற்ற பிறகே குற்றப் பத்திரிகை தயாரிக்க வேண்டும். இவ்வழக்கில் அத்தகைய விளக்கத்தை சசிகலா, சுதாகரன், இளவரசியிடம் கேட்க வில்லை. குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிமுறைக‌ளை விசாரணை அதிகாரி நல்லம நாயுடு மீறியுள்ளார்''என மூவர் தரப்பிலும் வாதிடப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு தெரிந்தே நடந்தது

நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது: “அரசுத் தரப்பு சாட்சிகளின் மூலம் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு ம‌ன்னார்குடி அருகே மூன்றரை ஏக்கர் நிலமும் வீடு மட்டுமே சொத்தாக இருந்தது. சுதாகரன் 1992-ம் ஆண்டு தாக்கல் செய்த வருமான சான்றிதழின்படி அவரது வருமான‌ம் ரூ.44 ஆயிரம் என தெரிகிறது. அதே ஆண்டு சுதாகரன் மயிலாப்பூர் கனரா வங்கியில் சேமிப்பு வங்கிக் கணக்கு தொடங்கினார். அப்போது அவரது சேமிப்பு ரூ.105 என வங்கி மேலாளர் வித்யாசாகர் தெரிவித்துள்ளார். இதேபோல இளவரசி யின் ஆண்டு வருமானம் ரூ.48 ஆயிரம் என அவரது 1993-ம் ஆண்டு வருமான சான்றிதழ் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பு சாட்சி கங்கை அமரன் தனக்கு சொந்தமான பையனூர் பங்களாவை வாங்கியது சசிகலாதான் என நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளார். இதேபோல சிறுதாவூர் பங்களா, நிலம், கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் நில உரிமையாளர்களின் வீடு தேடி பத்திரப் பதிவாளர்கள் சென்றுள்ளனர். பத்திரத்தில் வாங்குபவரின் பெயரை குறிப்பிடாமல் வெறுமனே காலியாக இருந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கி நிலத்தை வாங்கியுள்ளனர் என்பதை அரசு தரப்பு சாட்சிகள் ராதாகிருஷ்ணன், ராஜகோபாலன், கிரேக் ஜோன்ஸ் உள்ளிட்டோர் நிரூபித்துள்ளன‌ர்.

ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில் வசித்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சட்டத்துக்கு புறம்பாக சொத்து வாங்கி குவித்துள்ளனர். வாக்காளர் பட்டியலின்படி 4 பேரும் 36, போயஸ்கார்டன் வீட்டில் வசித்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு தன் வீட்டில் இருக்கும் தனது நண்பர்க‌ளின் நடவடிக்கை ப‌ற்றி தெரியாது என்றால் நம்ப முடியுமா?

‘‘சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் உங்களுடன் வசிப்பது ஏன்?'' என்று நீதிபதி மல்லிகார்ஜூனையா ஜெயலலிதாவிடம் கேட்டபோது, ‘‘இந்த கேள்விக்கு பதில் சொல்ல விருப்ப மில்லை''என பதில் அளித்துள்ளார்.

முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு வரும் அன்பளிப்புகள் மற்றும் முதல்வரின் பெயரைப் பயன்படுத்தி தவறான வழிகளில் சேர்க்கும் பணம், சொத்துகள் அனைத்தும் சசிகலாவின் வழியாகவே போயஸ்கார்டனுக்கு வந்துள்ளன. அதன் மூலம் சொத்துகளை வாங்கி குவிக்கும் வேலையில் சுதாகரனும் இளவரசியும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தத்தில் பொது ஊழியரான ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் கூட்டுச்சதியில் ஈடுபட்டள்ளனர்''என நீதிபதி குன்ஹா தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே வீட்டில் வசிப்பது ஏன்?

இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதி மன்றத்தில் சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பு முன்வைத்த வாதத்தில், ‘‘1991-96 காலகட்டத்தில் பையனூர் பங்களாவை சசிகலா கட்டவில்லை. ஏற்கெனவே கங்கை அமரனின் மனைவி மணிமேகலையால் கட்டப்பட்ட பங்களாவை சசிகலா சட்டப்பூர்வமாக வாங்கினார். இது தொடர்பாக தமிழ்நாடு மின் வாரியத்தில் பணியாற்றும் செல்வம் (குற்றவாளி தரப்பு சாட்சி),‘‘1991-க்கு முன்பே மணிமேகலை பையனூர் பங்களாவுக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தார்'' எனக்கூறி அதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். பையனூர் பங்களாவை வாங்கிய சசிகலா அதில் எந்த புதிய கட்டிடமும் கட்டவில்லை. இருப்பினும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பழைய கட்டிடத்துக்கு ரூ. 1 கோடி 25 லட்சத்து 90 ஆயிரத்து 261 என மதிப்பீடு செய்திருப் பதை தள்ளுபடி செய்ய வேண்டும்

கொடநாடு எஸ்டேட்டை வாங்குவதற் காக சசிகலா வங்கியில் ரூ.3.5 கோடியும் 8 நிறுவனங்கள் மூலம் ரூ.2.20 கோடியும் பெற்றுள்ளார். இதற்கான ஆதார மாக அனைத்து ஆவணங்களும் வருமான வரித்துறையின் சான்றிதழும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இளவரசிக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களா 1996-க்கு பிறகு கட்டப்பட்டது. அங்கு வாஸ்துவுக்காக கட்டப்பட்டிருந்த மீன் தொட்டிகளை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் நீச்சல் குளம் என மதிப்பீடு செய்துள்ளனர். சிறுதாவூர் பங்களா வழக்கு காலத்தில் கட்டப்பட்டது என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லாமலேயே மிகைப்படுத்தி மதிப் பிடப்பட்டுள்ளது.

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் நமது எம்.ஜி.ஆர், சூப்பர் டூப்பர் டி.வி, ஆஞ்சநேயா பிரிண்ட்டர்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் மூலம் வருமானம் வந்துள்ளது. அந்த வ‌ருமானங்களை வழக்கில் காட்டினால் மூவருக்கும் சாதகமாக அமைந்துவிடும் என்பதால் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மறைத்துள்ளது. நமது எம்ஜிஆர் நிறுவனத்துக்கு அரசு விளம்பரங்கள் மூலம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 400 வருமானம் வந்ததை விசாரணை அதிகாரி நல்லம நாயுடு ஒப்புக்கொண்டுள்ளதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்.

வருமான வரித்துறையில் தாக்கல் செய்த கணக்குப்படி சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் போதிய வருமானம் கிடைத்தது. அந்த வருமானத்தின் அடிப்படையில் மூவரும் நிலம் வாங்கினர் என ஜெயலலிதாவின் ஆடிட்டர் சவுந்திரவேலன் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.

ஆனால் நீதிப‌தி குன்ஹா,‘‘நால்வரும் கூட்டுசதி செய்ததாக தண்டனை வழங்கியுள்ளார். ஆனால் ஜெயலலிதா குற்றம் செய்ய சசிகலா, சுதாகரன், இளவரசி உடந்தையாக இருந்து அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்கு எந்த அடிப்படை ஆதாரமும் காட்டப்படவில்லை. சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கி மேலாளர் அருணாசலம் (அரசு தரப்பு சாட்சி 182) அளித்த சாட்சியத்தில் ஜெயலலிதாவின் வங்கி கணக்கில் இருந்து மூவ‌ருக்கும் பணப் பரிமாற்றம் நடைபெறவில்லை என கூறியுள்ளதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்'' என வாதிட்டனர்.

சற்றுநேரம் மவுனமாக இருந்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, ‘‘ஜெயலலிதாவும் சசிகலாவும் உறவினர்கள் இல்லை. சசிகலாவுக்கு திருமணமாகிவிட்டது. சுதா கரனுக்கும், இளவரசிக்கு தனித்தனியே குடும்பங்கள் இருந்தன. இருப்பினும் எதற்காக நால்வரும் ஒரே வீட்டில் இருந்தனர்?'' என கேட்டார்.

அதற்கு கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் சசிகலாவின் வழக் கறிஞருமான ஆர்.பசன்ட், ‘‘ஜெயலலிதா சசிகலாவின் நட்பு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நட்பு. சுதாகரனும், இளவரசியும் சசிகலாவின் உறவினர்கள் என்பதால் ஒரே வீட்டில் வசித்தனர். நண்பர்கள் ஒரே வீட்டில் வசிப்பது குற்றம் என எந்த நாட்டு சட்டமும் சொல்லவில்லையே?'' என வாதிட்டார்.

- மேலும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x