Published : 05 Mar 2015 12:18 PM
Last Updated : 05 Mar 2015 12:18 PM
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சிகிச்சைக்காக இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணியளவில் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது பெற்றோரும் சென்றுள்ளனர்.
10 நாட்களுக்கு அவர் பெங்களூருவில் தங்கி சிகிச்சை மேற்கொள்கிறார். கேஜ்ரிவால் திரும்பும் வரை முதல்வர் பொறுப்புகளை மணீஷ் சிசோடியா கவனித்துக் கொள்வார்.
உடல் நலக்குறைவு காரணமாக நேற்று நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில்கூட கேஜ்ரிவால் கலந்து கொள்ளவில்லை.
10 நாள் சிகிச்சை:
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ரத்த சர்க்கரை அளவு 300 ஐ தாண்டியுள்ளது. மேலும் அவருக்கு சளி, இருமல் பாதிப்பும் அதிகமாக உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் கேஜ்ரிவால் சந்தித்தபோது பெங்களூரு யோகா தெரபிஸ்ட் குறித்து மோடி கூறினார். அந்த யோகா தெரபிஸ்டிடம் சிகிச்சை பெற 10 நாள் விடுப்பில் கேஜ்ரிவால் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.
கட்சியில் தற்போது நிலவும் பிரச்சினைகள் காரணமாகவே கேஜ்ரிவால் 10 நாள் விடுப்பில் செல்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்தாலும் இதனை ஆம் ஆத்மி வட்டாரங்கள் மறுத்துள்ளன. கேஜ்ரிவாலின் பெங்களூரு பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது, அதற்கும் உட்கட்சி பூசலுக்கும் தொடர்பில்லை என்று அந்த வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT