Published : 03 Mar 2015 10:13 AM
Last Updated : 03 Mar 2015 10:13 AM
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை நீக்க சதி நடந்துவருவதாக அதன் செய்தித் தொடர்பாளர் குற்றம்சாட்டி உள்ளார்.
அதேநேரம், கட்சியின் நிறுவனர் உறுப்பினர்களான பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் கட்சியின் முடிவெடுக்கும் அதிகாரம் பெற்ற அரசியல் விவகாரக் குழுவிலிருந்து நீக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து நாளை நடைபெற உள்ள கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாவது முறை யாக போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலை யில், பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர், கட்சியின் செயல்பாடுகளை குறை கூறி செயற்குழு உறுப்பினர்களுக்கு கூட்டாக கடிதம் எழுதியதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது.
இதுதவிர பூஷண் தனியாக ஒரு கடிதம் எழுதியதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கடிதங்களில் கேஜ்ரிவாலின் தன்னிச்சையான செயல்பாடு குறித்தும் விமர்சனம் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கட்சியை பலவீனப்படுத்தி, யோகேந்திர யாதவை தலைவராக்குவதற்காக பிரசாந்த் பூஷண், அவரது தந்தை சாந்தி பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் முயற்சிப்பதாக கேஜ்ரிவால் தரப்பு கூறுகிறது.
தொடர்ந்து இதுபோன்ற ரகசிய கடிதத் தொடர்புகள் அம்பலமாகி வரும் நிலையில், யோகேந்திர யாதவ் ட்விட்டரில், “சிறுபிள்ளைத்தனமான பிரச்சினைகள் நமது மாபெரும் பணிகளை பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் அக்கட்சியில் உட்கட்சிப் பூசல் நிலவுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கட்சியின் மூத்த தலைவர் களுக்குள் கருத்து வேறுபாடு நிலவுவதை அக்கட்சி முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கட்சியின் தேசிய ஒருங்கிணைப் பாளர் பதவியிலிருந்து கேஜ்ரி வாலை நீக்க சதி நடக்கிறது. கருத்து வேறுபாடு இருந்தால் அதுகுறித்து கட்சிக்குள் விவாதித்து சுமுகத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இந்த விஷயத்தை வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாது.
இப்போது கட்சிக்குள் நடைபெறும் விஷயங்கள் கேலிக்குரியதாகி உள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள் இப்படி கேஜ்ரிவாலுக்கு எதிராக செயல்பட்டால், கட்சிப் பணிகள் எப்படி சுமுகமாக நடைபெறும் என்பது குறித்து நாளை கூட உள்ள கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT