Published : 23 Mar 2015 09:01 AM
Last Updated : 23 Mar 2015 09:01 AM
காஷ்மீரின் கதுவா, சம்பா பகுதி களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து அந்த மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
‘‘பாகிஸ்தான் அரசு அமைதி மற்றும் ஒற்றுமையை விரும்பினால், தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்’’ என்று முதல்வர் முப்தி முகமது சயீது வலியுறுத்தினார்.
காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக கூட்டணி கடந்த மார்ச் 1-ம் தேதி பதவியேற்றது. அதன்பின் கடந்த வெள்ளிக்கிழமை, கதுவா பகுதியில் உள்ள போலீஸ் நிலையம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 3 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நடந்த மறுநாளான சனிக்கிழமை, சம்பா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்தச் சண்டை யில் யாருக்கும் காயம் இல்லை.
இந்நிலையில், தீவிரவாதிகள் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து காஷ்மீர் சட்டப்பேரவை யில் நேற்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. சட்டப்பேரவை, மேலவை இரண்டிலும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட பின்னர் முதல்வர் முப்தி முகமது சயீது பேசியதாவது:
இந்திய - பாகிஸ்தான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையைச் சீர் குலைக்கும் நோக்கில் தீவிரவாதி கள் தாக்குதல் நடந்துள்ளது. இதில் சதி உள்ளது. அமைதி மற்றும் ஒற்றுமையை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விரும்பினால், தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு நேரடியாகத் தலையிட்டு பாகிஸ்தான் அரசை நிர்பந்திக்க வேண்டும்.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள சக்திகளைக் கண்டுபிடிக்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் மக்கள் வலிமையான மனம் படைத்தவர்கள். இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்களால் அவர்களை பீதியடையச் செய்ய முடியாது. தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்படுவது பாகிஸ்தான்தான். அதை அந்த நாடு புரிந்து கொள்ள வேண்டும். தீவிரவாத வலையில் சிக்கி கொண்டுள்ளது பாகிஸ்தான். தீவிரவாதத்தை ஒடுக்க எங்களால் முடியவில்லை என்று அந்த நாட்டு பிரதமர் நவாஸ் கூறினால், தீவிரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவுக்கும் பங்கு உண்டு என்று கூறுவேன்.
கதுவாவில் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார்? கராச்சியில் சர்ச்சுகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார்? பெஷாவர் பள்ளியில் தாக்குதல் நடத்தியவர்கள் யார்? தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எல்லோரும் அரசுக் குத் தொடர்பு இல்லாதவர்கள். அவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி போதிக்கவில்லை. மக்களைக் கொன்று குவிக்கும் அளவுக்கு அவர்களுக்கு என்ன கற்றுக் கொடுத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
கதுவா, சம்பாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது ஒன்றும் புதிதல்ல. காஷ்மீர் முதல்வராக நான் பல ஆண்டுகளுக்கு முன்னர் பதவியேற்றபோது, ஜம்முவில் புகழ்பெற்ற ரகுநாத் கோயில் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதுபோன்ற தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. எல்லையில் இந்திய வீரர்கள் 2 பேரின் தலைகளைத் தீவிரவாதிகள் துண்டித்து சென்றனர். எனினும், தீவிரவாதத்துக்கு எதிரான எங்கள் மன உறுதியை யாரும் அசைத்து பார்க்க முடியாது.
ஜம்மு காஷ்மீரில் விரைவில் அமைதி திரும்பும். ஜம்மு காஷ் மீரில் கடந்த 2003-ம் ஆண்டுக்குப் பிறகு அமைதி நிலவியது. அது போன்ற அமைதி மீண்டும் திரும்பும். அதற்கு அனைத்து கட்சியினரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் முப்தி முகமது சயீது பேசினார்.
முதல்வர் முப்தி பேசுகையில், ‘தீவிரவாதிகள்’ என்று குறிப் பிடாமல், அரசுக்குத் தொடர்பு இல்லாதவர்கள், யார் அவர்கள் என்ற ரீதியில் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்எல்ஏ நவாங் ரிக்ஸின் கூறுகையில், ‘‘தீவிரவாதிகளை நேரடியாகக் குறிப்பிடாமல், அரசுக்குத் தொடர்பு இல்லாதவர்கள் என்பது போல் முதல்வர் கூறுவது ஏன்? இதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்றார்.
அதற்கு முப்தி பதில் அளிக்கை யில், பாகிஸ்தானில் மசூதிகள், பள்ளி, சர்ச்சுகள், காஷ்மீரில் கதுவா, சம்பா பகுதிகளில் தாக்குதல் நடத்தியவர்களைத்தான் அப்படி குறிப்பிட்டேன்’’ என்று கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்..
கடந்த 1989-ம் ஆண்டு மத்தியில் வி.பி.சிங் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தது. அந்த அரசில் முப்தி முகது சையது உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அப்போது 1989 டிசம்பர் 8-ம் தேதி முப்தியின் மகள் ரூபையாவை ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
மருத்துவக் கல்லூரி மாணவியான அவரை மீட்க மத்திய அரசு சார்பில் தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதன்படி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த அமைப்பைச் சேர்ந்த 5 தீவிர வாதிகள் விடுதலை செய்யப்பட்டனர். முப்தியின் மகள் ரூபையாவும் பத்திரமாக வீடு திரும்பினார்.
தீவிரவாதத்தால் முப்தியின் குடும்பம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது முதல்வராகப் பதவியேற்றுள்ள அவர் ஜம்மு காஷ்மீரில் இருந்து தீவிரவாதத்தை முழுமையாக வேரறுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT