Last Updated : 03 Mar, 2015 05:59 PM

 

Published : 03 Mar 2015 05:59 PM
Last Updated : 03 Mar 2015 05:59 PM

சென்னை நோக்கியா ஆலையை மீண்டும் தொடங்க அரசு முயற்சி: மோடி தகவல்

சென்னையில் மூடப்பட்ட நோக்கியா ஆலையில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஜனநாயகத்தில் அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை என்றார்.

அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை...

காங்கிரஸ் மீது விமர்சனங்களைத் தொடுத்த மோடி, "இந்திய சுதந்திரம் அடைந்ததற்கு மற்றவர்களுடைய பங்களிப்பைப் பற்றி வாய்திறக்காத காங்கிரஸ், தேசத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுபவர்களையா பாராட்டப்போகிறது? ஜனநாயகத்தில் அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை. நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் போது கூட தேசம் வளைந்து கொடுக்கவில்லை" என்றார்.

மேலும், தங்களுடைய பொருளாதார கொள்கைகளையே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தற்போது வேறு வகையில் கடைபிடித்து வருகிறது என்ற காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முந்தைய வாஜ்பாய் ஆட்சியின் திட்டங்களைப் பட்டியலிட்டு, அதனை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எப்படி தங்களுடைய திட்டங்களாகக் கூறிவருகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

"இதற்காக கருவூலத்தில் நாங்கள் அமர்ந்திருக்கிறோம் என்பதனால், எங்களுக்கு அனைத்தும் தெரியும் என்று அர்த்தமல்ல. அனைவரும் சேர்ந்துதான் பாடுபட வேண்டும்.

லே முதல் கன்னியாகுமரி வரை, கச்சத்தீவு முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை, கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக உள்ள கோவா முதல் சீக்கியர்கள் பெரும்பான்மை வகிக்கும் பஞ்சாப் வரை பாஜக செல்வாக்கு செலுத்தும் அகண்டபாரதக் கட்சி" என்றார் அவர்.

கார்பரேட் நிறுவனங்களுக்கான ஆட்சியா?

தங்கள் ஆட்சியை கார்பரேட் நிறுவனங்களுக்கான ஆட்சி என்று எதிர்கட்சியினர் விமர்சனம் செய்வதை கண்டித்த மோடி, "பள்ளிகளில் கழிப்பறைகள் கட்டுகிறோம், இது கார்பரேட்களுக்கானதா? அல்லது மண் ஆரோக்கிய அட்டைகள் கார்பரேட்களுக்கானதா? தூய்மை இந்தியா, ஜன் தன் ஆகிய திட்டங்கள் கார்பரேட்களுக்காகவா?" என்று கேள்வி எழுப்பினார்.

உணவுப் பாதுகாப்புச் சட்டம் பற்றி சந்தேகம் கொள்பவர்களுக்காக மோடி கூறும்போது, "இதன் கீழ் வரும் 67% மக்கள் தொகை விகிதத்தில் எந்த வித குறைப்பும் செய்யப்பட மாட்டாது.

சென்னையில் மூடப்பட்ட நோக்கியா ஆலை மீண்டும் உற்பத்தியைத் தொடங்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கருப்புப் பணத்தை ஒழிக்க உருவாக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு அதன் பணிகளைச் செவ்வனே செய்து வருகிறது.

நிலச்சட்டம் தொடர்பாக கையகப்படுத்தும் நிலங்களுக்கு ஏற்கெனவே உள்ள சட்டத்தின் படி இழப்பீடு கிடைக்கும். அந்தச் சட்டத்தின் பலவீனங்கள் பற்றி பேசப்படவேண்டும்" என்றார் பிரதமர் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x