Published : 19 Mar 2015 09:26 AM
Last Updated : 19 Mar 2015 09:26 AM
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எம்.பி.க்கள் நேற்று பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினர். அமைச்சர்கள் நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் பதிலளித்தனர். அவற்றில் சில பின்வருமாறு:
கூடங்குளம் அணு மின்சார விலை அதிகரிக்கும்
மக்களவையில் அணுசக்தி துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியது:
கூடங்குளம் அணு மின் உற்பத்தி நிலையத்தின் 3,4-வது யூனிட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை இப்போது இருப்பதை விட இரு மடங்கு அதிகமாக இருக்கும். அணு உலையின் முதல் மற்றும் 2-வது யூனிட்டில் இப்போது உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை ஒரு கிலோவாட் ரூ.3.94 ஆக உள்ளது. 2020-21-ம் ஆண்டில் 3,4-வது யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கும். அப்போது அணு உலைக்கான செலவும் அதிகரித்திருக்கும். எனவே அந்த யூனிட்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஒரு யூனிட் ரூ.6.30 ஆக இருக்கும் என்றார்.
அமெரிக்க சம்மதத்துக்கு காத்திருப்பு
வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே. சிங் மக்களவையில் கூறியது:
அமெரிக்காவுடன் இணைந்து தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ள இருதரப்பு செயற்குழு கூட்டம் நடத்தப்படவில்லை. எனினும் இந்த ஆண்டு மத்தியில் இதுபோன்ற கூட்டம் நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் சம்மதத்துக்கு காத்திருக்கிறோம் என்றார்.
காந்தி ஜெயந்தி விடுமுறை ரத்தா?
பாஜக ஆளும் கோவா மாநில அரசு, விடுமுறை பட்டியலில் இருந்து காந்தி ஜெயந்தியை நீக்கிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. சாந்தாராம் நாயக் மாநிலங்களவையில் பிரச்சினை எழுப்பினார்.இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, காந்தி ஜெயந்தி என்பது தேசிய விடுமுறை நாள். அது எந்த மாநில அரசுக்கும் உரியது அல்ல. கோவா மாநில அரசு வெளியிட்ட விடுமுறை பட்டியலில் இருந்து அச்சுப் பிழை காரணமாக காந்தி ஜெயந்தி விடுபட்டுள்ளது. அந்த பிரச்சினையை இங்கு எழுப்ப வேண்டிய தேவையில்லை என்றார்.
தமிழகத்தில் கிரீன் எனர்ஜி காரிடார்
திமுக எம்.பி. கனிமொழியின் கேள்விக்கு பதிலளித்த மத்திய மின்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) பியூஷ் கோயல்:
காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைக் கொண்டு செல்லும் உட்கட்டமைப்பைப் பலப்படுத்தும் கிரீன் எனர்ஜி காரிடார் திட்டம் தமிழகத்தில் வரும் 2017-ம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவேற்றப்படும். காற்றாலை மின்சார வழித்தட உட்கட்டமைப்புப் பற்றாக்குறையால் பெரிய அளவில் மின்சாரம் வீணாகவில்லை. ‘கிரீன் எனர்ஜி காரிடார் திட்டம்’ புதுப்பித்தக்க எரிசக்தி உற்பத்தியில் முக்கிய பங்குவகிக்கும் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், இமாசல பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது.
சீனாவில் இந்திய சுற்றுலா ஆண்டு
சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா:
இந்தியாவுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சீனாவில் பல்வேறு வகை ஊடகங்களிலும் விளம்பரங்கள், கண்காட்சிகள், கருத்தரங்குகள், விளம்பர நிகழ்ச்சிகள், துண்டுப் பிரசுரங்கள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2015-ம் ஆண்டை சீனா, “இந்தியாவுக்கு பயணிப்போம் ஆண்டு” ஆக அனுசரித்து வருகிறது. 2012-ம் ஆண்டு 1,68,952 ஆக இருந்த சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 2013-ம் ஆண்டு 1,74,712 ஆக அதிகரித்துள்ளது.
விளையாட்டு வீரர்களை இனம் காணல்
விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால்:
சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் விதத்தில், திறன் மிக்க விளையாட்டு வீரர்களை பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து இனம்காணுவதற்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இளம் வயதிலிருந்தே அவர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தேசிய விளையாட்டுத் திறன் தேடல் திட்டம் (என்எஸ்டிஎஸ்எஸ்) அடுத்த நிதியாண்டிலிருந்து அமல்படுத்தப்படும். தேசிய விளையாட்டு அகாடமிகள் உருவாக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் விளையாட்டு அறிவியல் பாடம் தொடங்கப்படும். மருத்துவக் கல்லூரிகளும் இவ்விவகாரத்தில் கவனம் செலுத்தும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT