Published : 08 Mar 2015 11:21 AM
Last Updated : 08 Mar 2015 11:21 AM
நிலம் கையகப்படுத்தும் மசோதா மக்களவையில் நாளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் படவுள்ளது. இம்மசோதாவுக்கு ஆளும் கூட்டணியிலுள்ள சில கட்சிகளும், பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், மசோதா நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரில் வரும் வாரம் முக்கிய மசோதாக்கள் கொண்டு வரப்படவுள்ளன. இதனால், நாடாளுமன்றத்தில் கடும் அமளி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் குறிப்பாக ‘நியாயமான இழப்பீட்டுக்கான உரிமை மற்றும் நிலம் கையகப்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியுரிமை சட்ட திருத்த மசோதா-2015-க்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இம்மசோதா விவசாயிகளுக்கு எதிரானது என கடந்த வாரம் அண்ணா ஹசாரே, மேதா பட்கற் உள்ளிட்ட பலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்பு
இம்மசோதாவுக்கு மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது. சிரோமணி அகாலிதளம், சிவ சேனா, லோக் ஜனசக்தி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும், பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இம்மசோதா பெருநிறுவனங்களுக்கு ஆதராவாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அவசர சட்டமாக இயற்றப்பட்ட இம்மசோதா நாளை (திங்கள்கிழமை) மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பின்னர் வரும் சனிக்கிழமை மாநிலங்களவையில் விவாதம் நடத்தி, நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
திருத்தங்கள் இருக்கும்
இதுதொடர்பாக மத்திய அமைச்சரவை வட்டாரம் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
காங்கிரஸ் உட்பட எதிர்ப்பாளர்கள் அனைவரிடமும் தனியாகப் பேசி சமாதானம் செய்யும் பொறுப்பு அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, அருண் ஜேட்லி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகும் சந்தேகங்கள் எழுந்தால் அதைத் தீர்ப்பதற்காகவே, வரும் சனிக்கிழமை வரை அவகாசம் கொடுக்கும் வகையில் மக்களவையில் முன்கூட்டியே திங்கள்கிழமை இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
எதிர்ப்புகளைச் சமாளிக்க மசோதாவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். எனவே, மசோதா இரு அவைகளிலும் நிறைவேறுவதில் சிக்கல் இருக்காது என நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டாலும் அதில் மாற்றங்கள் செய்யப் பட்டிருப்பதால், மசோதாவை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது. அதிமுக மசோதா குறித்த தனது நிலையை இன்னும் அறிவிக்காமல் உள்ளது. மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் பற்றிய அறிவிப்புக்குப் பிறகு, அதிமுக தனது ஆதரவை அறிவிக்கும் என மத்திய அரசு நம்புகிறது. காங்கிரஸ் உட்பட அனைத்துத் தரப்பினரிடமும் அரசு பேசி வருவதாகக் கூறப்படுகிறது.
மாநிலங்களவையில் அமளி?
மாநிலங்களவையில் காப்பீடு மசோதா நாளையும், அதைத் தொடர்ந்து நிலக்கரி சுரங்கம் மற்றும் தாதுக்கள் மசோதா, வரும் சனிக்கிழமை நிலம் கையகப்படுத்தும் மசோதா ஆகியவை விவாதத்துக்கு வர இருக்கின்றன.
மக்களவையில் காப்பீடு மசோதா நிறைவேற்றப்பட்டபோது காங்கிரஸ் நடுநிலை வகித்தது. ஆனால், மாநிலங்களவையில் எதிர்ப்போம் என காங்கிரஸ் கூறியுள்ளது. இதனால் மாநிலங்களவையில் பெரும் அமளி ஏற்படக்கூடும்.
இது குறித்து ’தி இந்து’விடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறும்போது, ‘நிலக்கரி சுரங்கம் மற்றும் தாது மணல் மசோதாவால் சுரங்கம் அமைந்துள்ள மாநிலக் கட்சிகளின் விவாதங்களை பொறுத்து நிறைவேற வாய்ப்புள்ளது.
ஆனால், நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் பல முக்கிய மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும். இதை கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஆதரித்த பாஜக அதன் சில முக்கிய அம்சங்களை கைவிட்டு அவசர சட்டமாக்கியது. இதனால் அந்த மசோதா, விவசாயிகளுக்கு எதிராகாவும், பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவும் உள்ளதால் அது மாநிலங்களவையில் நிறைவேறுவது கடினம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT