Published : 09 Mar 2015 06:24 PM
Last Updated : 09 Mar 2015 06:24 PM
மத ஒற்றுமையை செயலில் காட்டும் முனைப்புடன் உத்தரப் பிரதேசத்தின் மதுரா நகரில் இந்து கோயில் கட்டி உதாரணமாக திகழ்கிறார் அஜ்மல் அலி ஷேக்.
உத்தரப் பிரதேசத்தின் மதுரா நகரில் உள்ள சஹார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அஜ்மல் அலி ஷேக். இந்தப் பகுதியில் இந்துக்களுக்கான கோயில் கட்டும் பணி கடந்த 8 மாதங்களாக நடந்து வருகிறது. கோயில் கட்டுமானத்தை முன்னிட்டு ஞாயிற்றுகிழமை இங்கு சிவன் மற்றும் அனுமாருக்கான பூஜை மேற்கொள்ளப்பட்டது.
அஜ்மல் அலி ஷேக், மதுரா மாவட்டத்தில் உள்ள சஹார் கிராமத்தின் இஸ்லாமிய மதத் தலைவர் ஆவார். இந்து மக்களுக்கு கோயில் கட்டுவதோடு , பக்தர்கள் தங்குவதற்கான அறைகளையும் இவர் கோயிலுக்கு அருகே கட்டி வருகிறார்.
இதற்காக அவர் சுமார் ரூ. 4 லட்சத்தை தனது சொந்த பணத்திலிருந்து செலவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, "இந்தப் பகுதியில் கோயில் எழுப்ப வேண்டும் என்று நீண்ட காலமாக எண்ணிக் கொண்டிருந்தேன்.
மதுராவுக்கு பல கிமீ தூரத்திலிருந்து பக்தர்கள் வருகின்றனர். கடந்த வருடம் சிவ ராத்திரிக்காக பெண்கள் சுமார் 4 கிமீ பயணித்து இங்கு வருவதை கண்டதும், கோயில் கட்ட வேண்டும் என்ற எனது எண்ணம் மேலும் வலுவானது" என்றார்.
அஜ்மல் அலியின் பணியை முன்னாள் உத்தரப் பிரதேச அமைச்சர் லட்சுமி நாராயண சவுதிரி பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த செயல் இரு மதத்தினரையும் ஒன்றிணைக்கும் நல்ல முயற்சி என்றும் தெரிவித்துள்ளார். அஜ்மல் அலியின் கோயில் கட்டும் பணிக்கு சஹார் கிராம மக்கள் உட்பட பல கிராம மக்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இவரது பணிக்கு அங்குள்ள இஸ்லாமியர்களும் வரவேற்பு அளித்து உதவி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT