Published : 21 Mar 2015 10:14 AM
Last Updated : 21 Mar 2015 10:14 AM
பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் குற்றவாளிகள் பலர், சிறைக்குள் இருந்தே பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கில் தங்கள் புகைப்படங்களைப் பதிவு செய்து வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாபில் பதிந்தா மற்றும் ரூபார் சிறைகளில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் உள்ளனர். இங்கு ஆயுத விற்பனை வழக்குத் தொடர்பாக, குல்பீர் சிங் என்பவர் கடந்த ஒரு மாதமாகச் சிறையில் இருக்கிறார். இவர், சிறையில் உள்ள தனது சகாக்கள் நான்கு பேருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்தப் புகைப்படத்தில் ஒருவர் செல்போனில் பேசுவதும் இடம்பெற்றிருந்தது.
அந்தப் புகைப்படத்தை வேறொரு கைதியான ஜஸ்ஸா மஹல்குர்த் என்பவர் பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார்.
பின்னர் அது பேஸ்புக்கில் பரவலாகக் கவனம் பெறத் தொடங்கியது. இந்த விஷயம் அரசின் காதுகளுக்கு எட்டியவுடன் நேற்று அந்தப் புகைப்படம் பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டது.
இது தனி ஒரு சம்பவம் அல்ல. இதுபோன்ற பல சம்பவங்கள் முந்தைய காலங்களிலும் தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதைத் தடுக்க 2010ம் ஆண்டு, பிரகாஷ் சிங் பாதல் அரசு, மாநிலத்தில் உள்ள ஏழு மத்திய சிறைகளில் செல்போன் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் 'ஜாமர்'கள் பொருத்த உத்தரவிட்டது. ஆனால் இப்போது வரை மூன்று சிறைகளில் மட்டுமே அவை பொருத்தப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ், "அகாலி தளம் தான் இதற்குப் பொறுப்பு. சிறைக்குள்ளிருந்து போதைப் பொருள் கடத்தல் கும்பல் இயங்குகிறது. அரசும் அதை அனுமதிக்கிறது" என்று புகார் கூறியுள்ளது.
இதற்கிடையே சிறைத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.தண்டல் கூறும் போது, "சிறைக்குள் குற்ற வாளிகள் பேஸ்புக் பயன்படுத்து வது தீவிரமான ஒரு விஷயம் தான். இதற்குப் பின்னால் உள்ள ஊழல் அதிகாரிகள் தண்டிக்கப் படுவார்கள்" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT