Last Updated : 14 Mar, 2015 12:21 PM

 

Published : 14 Mar 2015 12:21 PM
Last Updated : 14 Mar 2015 12:21 PM

கேரளாவில் முழு அடைப்பு: கல்வீச்சில் அரசுப் பேருந்து ஓட்டுநர் காயம்

கேரளாவில் இடதுசாரி கூட்டணியினர் சார்பில் நடைபெறும் பந்த் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கல்வீச்சு சம்பவத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் காயமடைந்தார்.

மாநிலம் முழுவதும் பரவலாக வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான அரசுப் பேருந்துகளும் ஓடவில்லை. தனியார் பேருந்துகளும் இயங்கவில்லை. முழு அடைப்பையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருவனந்தபுரம், கொல்லத்தில் ஆங்காங்கே கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் காயமடைந்தார். கொச்சி, கோழிக்கோட்டில் ஒரு சில ஆட்டோக்கள் மட்டுமே இயங்குகின்றன. அவற்றில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கேரள சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் தாக்கலின்போது கடும் அமளி நிலவியது. பேரவைக்கு வெளியிலும் எதிர்க்கட்சியான இடதுசாரி கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் மார்க்சிஸ்ட் தொண்டர் ஒருவர் உயிரிழந்தார்.

கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஜக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் உள்ளது. மாநிலத்தில் மதுபான பார்களை அனுமதிக்க லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள நிதி அமைச்சர் கே.எம்.மாணி பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. இந்நிலையில், அவர் களது கடும் எதிர்ப்பு, அமளிக்கு மத்தியில் மாணி பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார்.

இதனால் ஆவேசமடைந்து வன்முறையில் இறங்கிய எதிர்க் கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை தாக்கி சேதப்படுத்தினர். மாணிக்கு எதிரான போராட்டம் பேரவைக்கு வெளியில் வன்முறையாக மாறியது. போராட்டத்தில் இறங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் கம்யூனிஸ்ட் இளைஞர் அணி தொண்டர்களை தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீஸார் கலைத்தனர். போராட்ட கும்பல் போலீஸ் ஜீப் ஒன்றுக்கு தீவைத்தது. இந்த வன்முறையில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 64 வயது தொண்டர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து இடதுசாரி கூட்டணியினர் பந்த நடத்தி வருகின்றனர்.

கோழிக்கோட்டில் இருந்து வரும் தகவலின்படி, செவ்வையூர் அருகே தமிழக பதிவு எண் கொண்ட லாரி மீதும், மாணவர்கள் ஏற்றி வந்த டூரிஸ்ட் வேன் மீதும் கற்கள் வீசப்பட்டதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x