Published : 03 Mar 2015 07:45 PM
Last Updated : 03 Mar 2015 07:45 PM
நாளை (புதன்கிழமை) ஆம் ஆத்மி கட்சி தேசிய செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இதில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கலந்து கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மியில் உட்கட்சிப் பூசல் உள்ளிட்ட விவகாரங்களுக்குத் தீர்வு காணும் நோக்கத்துடன் செயற்குழு கூட்டம் கூட்டப்படுகிறது. ஆனால், தனக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினாலும், அலுவலக கடமை உள்ளதாலும் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.
நாளை மாலை கேஜ்ரிவால் 10 நாட்கள் இயற்கை மருத்துவச் சிகிச்சைக்காக பெங்களூரு புறப்பட்டு செல்கிறார்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை நீக்க சதி நடந்துவருவதாக அதன் செய்தித் தொடர்பாளர் நேற்று குற்றம்சாட்டி இருந்தார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர், கட்சியின் செயல்பாடுகளை குறை கூறி செயற்குழு உறுப்பினர்களுக்கு கூட்டாக கடிதம் எழுதியதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது.
இதுதவிர பூஷண் தனியாக ஒரு கடிதம் எழுதியதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கடிதங்களில் கேஜ்ரிவாலின் தன்னிச்சையான செயல்பாடு குறித்தும் விமர்சனம் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கட்சியை பலவீனப்படுத்தி, யோகேந்திர யாதவை தலைவராக்குவதற்காக பிரசாந்த் பூஷண், அவரது தந்தை சாந்தி பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் முயற்சிப்பதாக கேஜ்ரிவால் தரப்பு கூறுகிறது.
இந்நிலையில், “கட்சியில் நடக்கும் விவகாரங்களினால் ஆழமாக புண்பட்டுள்ளேன். டெல்லி மக்கள் நம் மீது காட்டிய நம்பிக்கைக்கு துரோகம் இழைப்பதாகும் இது.
இந்த அசிங்கமான போட்டி அரசியலில் என்னை இழுக்க நான் அனுமதிக்கப்போவதில்லை. டெல்லி ஆட்சியில் மட்டுமே கவனம் செலுத்துவேன். எந்தச் சூழ்நிலையிலும் டெல்லி மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கை உடைய அனுமதியேன்.” என்றார் அர்விந்த் கேஜ்ரிவால்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT