Published : 02 Mar 2015 11:30 AM
Last Updated : 02 Mar 2015 11:30 AM
தேசிய மென்பொருள் மற்றும் சேவை துறை நிறுவனங்கள் சங்கத்தின் (நாஸ்காம்) 25-ம் ஆண்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் மோடி பேசியதாவது:
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டம் கடந்த ஜனவரி 1-ம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்கள் ஓட்டல்கள் உட்பட வர்த்தக ரீதியில் முறைகேடாக பயன்படுத்தப்படுவது 10 சதவீதம் தடுக்கப்பட்டு, கோடிக்கணக்கான மானிய செலவு அரசுக்கு மிச்சமாகி உள்ளது.
நான் பிரதமரான பிறகு, சுமார் 50-க்கும் மேற்பட்ட உலக தலைவர்களை சந்தித்துள்ளேன். அவர்களில் 20 முதல் 30 பேர் இணையதள பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி) குறித்து தங்கள் கவலையை வெளிப்படுத்தி உள்ளனர். இந்தியாவிலும் இந்தப் பிரச்சினை உள்ளது. இதற்குத் தீர்வு காண இளைஞர்கள் முன்வர வேண்டும்.
உலக அளவில் இந்தத் துறைக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. இதைப் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு குறித்து ஆராய செயல்பாட்டுக் குழு ஒன்றை அமைக்க நாஸ்காம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களை மின்னணு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்காக டிஜிட்டல் இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் ஊழல் மற்றும் முறைகேடுகள் தடுக்கப்பட்டு வருகின்றன.
செல்போன் வழி நிர்வாகத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘மொபைல் ஆப்’ இப்போது பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் பிரதமர் அலுவலக இணையதளத்தை பொதுமக்கள் தங்கள் செல்போன் மூலம் சுலபமாக பயன்படுத்துவதற்கு ஏதுவாக ‘மொபைல் ஆப்’ உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆலோசனைகளை மைகவ் டாட் இன் என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT